சென்னை ஐகோர்ட்டில் 7 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்பு


சென்னை ஐகோர்ட்டில் 7 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்பு
x
தினத்தந்தி 4 Jun 2018 12:00 AM GMT (Updated: 2018-06-04T04:19:32+05:30)

சென்னை ஐகோர்ட்டுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய நீதிபதிகள் 7 பேர் இன்று பதவி ஏற்கின்றனர். இவர்களுக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டிற்கு 7 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 1-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை தொடர்ந்து 7 புதிய நீதிபதிகளும் இன்று (திங்கட்கிழமை) பிற்பகலில் பதவி ஏற்கின்றனர்.

இவர்களுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்துவைக்கிறார். புதிய நீதிபதிகளின் வாழ்க்கை வரலாறு பின்வருமாறு.

பி.டி.ஆஷா 1966-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந்தேதி பிறந்தார். இவரது, பெற்றோர் அச்சுதன் நாயர்-ராதா. சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள புனித கொலம்பியன் ஆங்கிலோ-இந்தியன் பள்ளியில் 10-ம் வகுப்பு வரையிலும், எழும்பூர் செயின்ட் ஆண்டனி ஆங்கிலோ-இந்தியன் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளையும், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தார்.

பின்னர், வக்கீலாக பதிவு செய்து, மூத்த வக்கீல்கள் எம்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.பார்த்தசாரதி, ஆர்.சேகர் ஆகியோரிடம் ஜூனியராக பணியாற்றினார். ரிட், சிவில் உள்பட ஏராளமான வழக்குகளில் ஆஜராகி உள்ளார்.

எம்.நிர்மல்குமார் 1965-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதி பிறந்தார். இவரது பெற்றோர் வி.முருகேசன்-எம்.சேஷாபாய். தந்தை முருகேசன், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

சென்னை சாந்தோம் பள்ளியில் பள்ளி படிப்பையும், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தார். 1989-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து, மூத்த வக்கீல் கே.அசோகனிடம் ஜூனியராக சேர்ந்தார்.

அதன்பின்னர், தனியாக வக்கீல் தொழில் செய்து வந்தார். போட்டி தேர்வில் வெற்றிப்பெற்று மத்திய கலால் துறையில் இன்ஸ்பெக்டராக 1994 ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரையிலும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையராக 1996 முதல் 1997-ம் ஆண்டு வரையிலும் பணியாற்றினார்.

பின்னர், இந்த பதவிகளை ராஜினாமா செய்து விட்டார். அதன்பின்னர், சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை, மாவட்ட செசன்சு கோர்ட்டுகளில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி உள்ளார். இவருக்கு ஷோபா நிர்மல் என்ற மனைவி உள்ளார். மகள் திவ்யா, திருவள்ளூரில் உள்ள பிரியதர்ஷினி மருத்துவ கல்லூரியில், பல் மருத்துவம் படித்து வருகிறார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் 1990-ம் ஆண்டு நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் சட்ட படிப்பை முடித்தார். கேரளா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதியும், மூத்த வக்கீலுமான டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அய்யரிடம் ஜூனியராக பணியாற்றினார். 1996-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக பணியை தொடங்கினார். சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு சார்பில் ஆஜராகும் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றினார்.

சி.பி.ஐ. தரப்பு வக்கீலாகவும் சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றினார். அப்போது, குஜராத்தில் நடந்த போலி என்கவுண்ட்டர் வழக்கு உள்ளிட்ட சி.பி.ஐ. விசாரித்த பல வழக்குகளுக்கு இவர் ஆஜரானார். இந்தநிலையில், சுப்பிரமணியம்பிரசாத் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை பெரம்பூரில் 1969-ம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறந்தார். இவரது பெற்றோர் எம்.ஏ.நந்தா-சூடாமணி. பெரம்பூர் செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பையும், மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் பி.காம். படிப்பையும், டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரியில் சட்ட படிப்பையும் முடித்து 1993-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார்.

பின்னர், மூத்த வக்கீல் பி.ராமமூர்த்தியிடம் ஜூனியராக சேர்ந்தார். சிவில், கிரிமினல் உள்பட ஏராளமான வழக்குகளில் ஆஜராகி வந்தார். தமிழ்நாடு ஜூடிசியல் அகடாமில், கீழ் கோர்ட்டு நீதிபதிகளுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். இதுதவிர, பல வழக்குகளில் ஐகோர்ட்டுக்கு உதவும் நபராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஜி.கே. இளந்திரையன் 1970-ம் ஆண்டு ஜூலை 9-ந்தேதி மேட்டூர் அருகே கோனூர் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை டாக்டர் வி.ஞானமூர்த்தி, கால்நடைத்துறை இயக்குனராக பணியாற்றியவர். தாயார் மணிமேகலை பள்ளி ஆசிரியை.

மேட்டூரில் உள்ள அரசு பள்ளியில் பள்ளி படிப்பையும், புதுச்சேரி அம்பேத்கர் கல்லூரியில் சட்ட படிப்பையும் முடித்து 1994-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து, மூத்த வக்கீல் டி.கந்தசாமியிடம் ஜூனியராக சேர்ந்தார். சிவில், கிரிமினல் உள்ளிட்ட பல வழக்குகளில் ஆஜராகி உள்ளார்.

தமிழ்நாடு சமரச மையத்தின் நடுவராக இருந்து 150-க்கும் மேற்பட்ட வழக்குகளை சமரச பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக் கொண்டு வந்துள்ளார். இவரது மனைவி இளநங்கை, அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மகள் இலக்கியா, 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே நமச்சிவாயபுரம் கிராமத்தில் 1968-ம் ஆண்டு ஜூன் 3-ந்தேதி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறந்தார். இவரது பெற்றோர் பி.கிருஷ்ணன் கவுண்டர்-காவேரி. விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர், நமச்சிவாயபுரம், தொட்டியம் மற்றும் சின்ன சேலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி படிப்பை முடித்தார். திருச்சி நேஷனல் கல்லூரியில் பி.காம். படிப்பையும், சென்னை அம்பேத்கர் கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்து, 1994-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார்.

இவர் மூத்த வக்கீல்கள் ஏ.நடராஜன், அரவிந்த் பி.தத்தார் ஆகியோரிடம் ஜூனியராக பணியாற்றினார். சிவில், கிரிமினல், வரி உள்ளிட்ட ஏராளமான வழக்குகளில் ஆஜராகி உள்ளார். இவரது மனைவி ரமணி. மகள் ரிஷிகா.

சி.சரவணனின் தந்தை பி.கே.சின்னதுரை மத்திய அரசு பணியில் இருந்ததால், அவர் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றினார். அதனால் நீதிபதி சி.சரவணன் மத்திய பிரதேசம் ஜமால்பூர் மற்றும் நீலகிரியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் பெங்களூரு நேஷனல் சட்டகல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார்.

1994-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். மூத்த வக்கீல்கள் வைகை, அண்ணா மேத்யூ ஆகியோரிடம் ஜூனியராக பணியாற்றினார். அரவிந்த் பி.தத்தாருடன் வக்கீல் தொழில் செய்தார். இவரது மனைவி தேன்மொழியும் வக்கீலாக பணிபுரிகிறார். இவர்களுக்கு ஆரியா, ஸ்டுடி ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

Next Story