உள்ளாட்சி துறை மானிய கோரிக்கை விவாதம்; ஜெயலலிதா நினைவிடத்தில் அமைச்சர் வேலுமணி மரியாதை


உள்ளாட்சி துறை மானிய கோரிக்கை விவாதம்; ஜெயலலிதா நினைவிடத்தில் அமைச்சர் வேலுமணி மரியாதை
x
தினத்தந்தி 4 Jun 2018 4:04 AM GMT (Updated: 2018-06-04T09:34:49+05:30)

சட்டசபையில் உள்ளாட்சி துறை மானிய கோரிக்கைக்கான விவாதம் நடைபெற உள்ள நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அமைச்சர் வேலுமணி இன்று மரியாதை செலுத்தினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் 2018-2019ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்துவதற்காக கடந்த மே மாதம்  29ந்தேதி தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. அன்றைய தினம் வனம் மற்றும் சுற்றுச்சூழல், தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது.

இதனை தொடர்ந்து 30ந்தேதி பள்ளி கல்வித்துறை, உயர்கல்வி துறை மீதான மானிய கோரிக்கையும், 31ந்தேதி எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானியக்கோரிக்கையும் நடைபெற்றது. ஜூன் 1ந்தேதி மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது.

இந்த நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று முன்தினமும், நேற்றும் தமிழக சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. 2 நாள் விடுமுறைக்கு பிறகு, தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.

காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கும் இன்றைய கூட்டத்தில், தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது.

இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்து பேசுகிறார். இறுதியாக, தனது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட இருக்கிறார்.

சட்டசபையில் உள்ளாட்சி துறைக்கான மானிய கோரிக்கை நடைபெற உள்ள நிலையில் அமைச்சர் வேலுமணி சட்டசபைக்கு செல்வதற்கு முன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று இன்று மரியாதை செலுத்தினார்.

இதேபோன்று மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும் அவர் மரியாதை செலுத்தினார்.

Next Story