நீதிமன்றத்தை அணுகி ‘காலா’ படம் வெளியிட தடை வாங்குவோம் மறைந்த தொழிலதிபரின் மகன் டி.ஜவகர் நாடார் பேட்டி


நீதிமன்றத்தை அணுகி ‘காலா’ படம் வெளியிட தடை வாங்குவோம் மறைந்த தொழிலதிபரின் மகன் டி.ஜவகர் நாடார் பேட்டி
x
தினத்தந்தி 4 Jun 2018 10:45 PM GMT (Updated: 2018-06-05T03:57:02+05:30)

என்னுடைய தந்தையின் கதை என்பதால் ‘காலா’ படத்துக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகி தடை வாங்குவோம் என்று மும்பையை சேர்ந்த மறைந்த தொழிலதிபர் எஸ்.திரவிய நாடாரின் மகன் டி.ஜவகர் நாடார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘காலா’. இந்த படம் வருகிற 7-ந்தேதி வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) உமரிக்காட்டில் இருந்து மும்பைக்கு சென்று, தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி பகுதியில் வாழ்ந்து மறைந்தவர் தொழிலதிபர் எஸ்.திரவியம் நாடார்.

‘காலா’ படம் அவருடைய வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டது என்று கூறப்பட்டது. இதையடுத்து மும்பை சயான் கிழக்கு பகுதியில் வசித்து வரும் எஸ்.திரவியம் நாடாரின் மகனும், பத்திரிகையாளருமான டி.ஜவகர் நாடார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தரப்பில் ‘காலா’ படத்துக்கு எதிராக நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் மற்றும் ‘வொன்டர்பார்ஸ்’ நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட அந்த நோட்டீசு குறித்து டி.ஜவகர் நாடார் ‘தினத்தந்தி’ நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காட்டில் இருந்து கடந்த 1955-ம் ஆண்டு வாக்கில் என்னுடைய தந்தை எஸ்.திரவியம் நாடார் மும்பைக்கு வந்தார். ஆரம்பத்தில் சின்ன, சின்ன வேலைகள் செய்த அவர் நாளடைவில் தொழில் செய்து நல்ல நிலைக்கு வந்தார். கருப்பட்டி வியாபாரம் செய்ததால் என்னுடைய தந்தையை எல்லோரும் ‘குட்வாலா சேட்’ என்று அழைப்பார்கள். சில நேரங்களில் ‘காலா சேட்’ என்றும் அழைப்பார்கள்.

என்னுடைய தந்தை வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் இருந்து மும்பைக்கு அதிகமானோர் வந்தனர். மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பிறரால் பிரச்சினைகள் ஏற்படும்போது எல்லாம் தமிழர்களுக்கு என்னுடைய தந்தை ஆதரவாக இருந்தார். தன்னால் முடிந்த அளவு உதவிகளை தமிழர்களுக்கு செய்தார். மேலும் என்னுடைய தந்தை கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஒருபோதும் ஈடுபட்டது இல்லை.

‘காலா’ திரைப்படம் நெல்லையில் இருந்து மும்பைக்கு வந்து தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் ஒரு தலைவரை பின்னணியில் கொண்ட கதையாக இருக்கிறது. படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித்திடம் எங்கள் தந்தையின் கதையாக இருக்குமோ? என்று நானும், என்னுடைய சகோதரி விஜயலட்சுமியும் கேட்டோம். அதற்கு அவர் இந்த படம் முழுக்க, முழுக்க கற்பனை கதை என்று கூறினார். ‘காலா’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகியது.

அதனை பார்க்கும்போது இந்த படத்தின் கதை என்னுடைய தந்தையின் வாழ்க்கை வரலாற்றை உறுதி செய்யும் வகையில் சில காட்சிகள் இருப்பதை பார்த்தோம். ரஜினிகாந்துக்கு 3 மகன்கள், ஒரு மகள் மற்றும் 5 பேரன், பேத்திகள் மற்றும் குடையை வைத்திருப்பது போன்ற சில காட்சிகள் என் தந்தையை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. அதனால் ‘காலா’ படத்தில் வரும் கதை என்னுடைய தந்தையுடையது என்பதை உறுதி செய்யமுடிகிறது.

இயக்குனர் பா.ரஞ்சித் கற்பனை கதை என்று சொல்கிறாரே.. ஒரு உண்மையான சம்பவத்தை வைத்து தான் படம் எடுக்க முடியும். உண்மை சம்பவம் இல்லாமல் படம் எடுக்க முடியுமா? என்னுடைய தந்தையின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ‘காலா’ படம் எடுக்கப்பட்டது என்ற உண்மையை மறைப்பது ஏன் என்று தெரியவில்லை. ஏனெனில் என் தந்தை வாழ்ந்த காலத்தில் அவரை போன்ற செல்வாக்கு மிகுந்த தமிழர்கள் இல்லை.

இதனால் இந்த கதை யாருடையது? என்பதை முதலில் தெளிவுபடுத்தவேண்டும். உள்நோக்கத்தோடு என் தந்தையின் வரலாறு தவறாக திரிக்கப்பட்டிருக்குமோ? உண்மை சம்பவங்கள் மறைக்கப்பட்டிருக்குமோ? என்ற அச்சம் எழுகிறது. தாராவியை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தாராவி மக்களுக்கு எந்தவித பயனையும் கொடுக்கவில்லை. இதனால் ரூ.101 கோடி நஷ்டஈடு கேட்டு ரஜினிகாந்துக்கும், காலா பட தயாரிப்பு நிறுவனத்துக்கும் நோட்டீசு அனுப்பியுள்ளோம்.

நானே முதலில் ஒரு ரஜினிகாந்த் ரசிகன் தான். நோட்டீசு அனுப்புவதற்கு எங்களுக்கு உடன்பாடு இல்லை. பணம் வாங்கவேண்டும் என்பது எங்களுடைய நோக்கம் இல்லை. என்னுடைய தந்தையின் வரலாற்றை சித்தரிக்கும் கதை என்பதால் ‘காலா’ படத்துக்கு எதிராக நாங்கள் கொடுத்த நோட்டீசின் அடிப்படையில் காலக்கெடு முடிவடைந்ததையடுத்து நீதிமன்றத்தை அணுகி படம் வெளியிடுவதற்கு தடை வாங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story