தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தியது பற்றி போலீசாரிடம் விசாரணை நடத்தப்படும்


தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தியது பற்றி போலீசாரிடம் விசாரணை நடத்தப்படும்
x
தினத்தந்தி 5 Jun 2018 12:15 AM GMT (Updated: 4 Jun 2018 11:06 PM GMT)

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு பற்றிய விசாரணையை நேற்று தொடங்கிய நீதிபதி அருணா ஜெகதீசன், போலீசாரிடம் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தர மாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

அப்போது கலவரம் ஏற்பட்டதால், போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலி ஆனார்கள்.

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இதையடுத்து அருணா ஜெகதீசன் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, வருவாய் அலுவலர் வீரப்பன் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் அவர் தூத்துக்குடி தெற்கு கடற்கரை ரோடு சுற்றுலா மாளிகையில் அமைக்கப்பட்டு உள்ள விசாரணை ஆணைய முகாம் அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று ஆலோசனை நடத்திய பின் விசாரணையை தொடங்கினார்.

மாலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அங்கு துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது சிலர், ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தவுடன் எங்களை போலீசார் கைது செய்வதாக கூறுகிறார்கள் என்று தெரிவித்தனர்.

அவர்களிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் கூறும்போது, “நீங்கள் அனைவரும் நல்ல முறையில் சிகிச்சை பெற்று குணமடைய வேண்டும். பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொண்டு பூரண உடல் நலம் பெற வேண்டும். அனைவருக்கும் 10 நாட்களில் விசாரணைக்காக சம்மன் அனுப்பப்படும். அப்போது கடற்கரை ரோட்டில் உள்ள சுற்றுலா மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்துக்கு வந்து விவரங்களை தெரிவிக்கலாம். உங்களால் வர முடியாத நிலை இருந்தால் நான் உங்கள் வீட்டுக்கே வந்து விசாரணை நடத்துகிறேன். ஆணையத்தில் ஆஜர் ஆவதற்காக வருபவர்களை போலீசார் எதுவும் செய்யமாட்டார்கள். நீங்களும் ஒழுக்கமாக இருக்க வேண்டும். மக்கள் அச்சப்படாமல், தைரியமாக தகவல்களை தெரிவிக்கலாம்” என்று கூறினார்.

அதன்பிறகு நீதிபதி அருணா ஜெகதீசன், துப்பாக்கி சூட்டில் பலியான சிலோன் காலனியைச் சேர்ந்த கந்தையா, புஷ்பாநகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார், மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்த சண்முகம் ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்களுடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது அவர்களிடம், நடந்த சம்பவங்களை விசாரணை ஆணையத்தில் தைரிய மாக சொல்லுங்கள். பயப்படா தீர்கள் என்று தெரிவித்தார்.

முன்னதாக அருணா ஜெகதீசன் நேற்று மதியம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

விசாரணை ஆணையத்தின் தலைமை அலுவலகம் சென்னை கிரீன்வேஸ் ரோட்டில் இயங்கி வருகிறது.

30-ந் தேதி வரை பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யலாம் என்று தற்போது அறிவுறுத்தி உள்ளேன். தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் பிரமாண வாக்குமூலத்தை பெற்று பதிவு செய்ய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கோர்ட்டில் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த அலுவலரும், மாவட்ட நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்று விட்டு வக்கீலாக பணியாற்றி வருபவரும் முகாம் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் 2 பேரும் பிரமாண பத்திரம் மற்றும் ரகசிய தகவல்களை பெறுவதற்கு பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் சமர்ப்பிக்கும் தகவல்கள் பாதுகாக்கப்படும். தொலைக் காட்சி, பத்திரிகை, சமூக ஆர்வலர்களிடம் இருக்கும் வீடியோ பதிவு காட்சிகளை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாளை (அதாவது இன்று) களஆய்வு மேற்கொள்ள உள்ளேன். கலெக்டர் அலுவலகம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள், ஸ்டெர்லைட் குடியிருப்பு, வி.வி.டி.சிக்னல் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட இருக்கிறேன்.

விசாரணை 3 பகுதிகளாக நடைபெறும். முதலாவதாக பாதிக்கப்பட்ட மக்கள், காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்கள், துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் இதர பொதுமக்களை விசாரிக்க உள்ளேன்.

இரண்டாவதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், சமூக ஆர்வலர்கள், நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்பவம் பற்றி தெரிந்தவர்கள், தகவல் அளிப்பவர்கள், விசாரணை ஆணையம் விசாரிக்க எண்ணி உள்ள நபர்கள், பத்திரிகை, தொலைக்காட்சியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும்.

மூன்றாவதாக போலீஸ் துறையை சேர்ந்தவர்கள், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சொல்லப்படும் போலீசார், தன்னிச்சையாக சாட்சியம் கூற விரும்புகிறவர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், போலீஸ் துறை உயர் அதிகாரிகள், முன்பு இருந்த மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் இதர அதிகாரிகள் விசாரிக்கப்படுவார்கள்.

இந்த விசாரணைக்கு 3 மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. விரைவில் விசாரணை நடத்தி முடிக்கப்படும். இவ்வாறு நீதிபதி அருணா ஜெகதீசன் கூறினார்.

Next Story