அனைத்து மாவட்ட வக்கீல்கள் சங்கங்களுக்கும் சட்ட புத்தகம் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு


அனைத்து மாவட்ட வக்கீல்கள் சங்கங்களுக்கும் சட்ட புத்தகம் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Jun 2018 10:10 PM GMT (Updated: 5 Jun 2018 10:10 PM GMT)

சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளை உள்பட அனைத்து மாவட்ட வக்கீல்கள் சங்கங்களுக்கும் சட்ட புத்தகம் வழங்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் சட்டத்துறை, சிறைச்சாலைகள், நீதி நிர்வாகம் ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது நேற்று எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அந்தத் துறைகளின் அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலளித்துப் பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-

2017-18-ம் கல்வி ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்ட தர்மபுரி அரசு சட்டக்கல்லூரிக்காக, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் ரூ.77.07 கோடி மதிப்பீட்டில் மாணவ-மாணவிகள் விடுதிகளுடன் கூடிய நிரந்தரக் கட்டிடம் கட்டப்படும்.

கோயம்புத்தூர் அரசு சட்டக்கல்லூரியில் கருத்தரங்குகள், சிறப்பு சட்ட வகுப்புகள், கலை நிகழ்ச்சிகள், பட்டமளிப்பு விழா மற்றும் பிற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தரை மற்றும் முதல் தளத்துடன் கூடிய கலையரங்கம் மற்றும் நூலகக் கட்டிடம், 4 ஆயிரத்து 254 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.10.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளை மற்றும் அனைத்து மாவட்டங்களில் உள்ள 32 வக்கீல்கள் சங்கங்களுக்கு சட்டப் புத்தகங்களும், புத்தக அலமாரிகளும் வழங்கப்படும்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நடுவர்களுக்கான (1 மற்றும் 2) குடியிருப்புகள் கட்டப்படும்.

திண்டிவனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டப்படும்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழிலாளர் நல நீதிமன்றம் அமைக்கப்படும்.

புழல் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளின் அவசர தேவைக்காக புதிய அவசர கால ஊர்தி வழங்கப்படும்.

விழுப்புரம், தேனி, தர்மபுரி மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக்கழகம் மூலம் கோவை, திருச்சி, சேலம், கடலூர் மத்திய சிறைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

புழல், வேலூர், திருச்சி பெண்கள் தனிச்சிறை மற்றும் புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளியில், தடைச்செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வரப்படுவதை தடுக்க 4 எக்ஸ் ரே ஸ்கேனர் நிறுவப்படும்.

புழல் மத்திய சிறை 2 தவிர மற்ற அனைத்து மத்திய சிறை வளாகங்களிலும் காலியாக உள்ள இடங்களில் திறந்த வெளி சிறை அமைக்கப்படும்.

சிறைத்துறையில் பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற அனைத்து அமைச்சுப் பணியாளர்களுக்கும், காவல்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கும் வழங்கப்படுவதைப்போல, காவல்துறை பொருள் வழங்கீட்டு மையத்தில் சலுகை விலையில் பொருட்கள் பெற ஆணை வழங்கப்படும். இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.

Next Story