6 மாநில முதல்-மந்திரிகள் ‘நீட்’ தேர்வை எதிர்க்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


6 மாநில முதல்-மந்திரிகள் ‘நீட்’ தேர்வை எதிர்க்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Jun 2018 10:45 PM GMT (Updated: 5 Jun 2018 10:24 PM GMT)

பா.ஜனதா ஆட்சி செய்யாத 6 மாநில முதல்-மந்திரிகள் ‘நீட்’ தேர்வை எதிர்க்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:- கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு அடிப்படை தீமையாக இருக்கும் ‘நீட்’ தேர்வுக்கு கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகள் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்.

இந்தி மொழி பேசாத மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு வினாத்தாள்கள் முரண்பாடுகளுடன் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. ஆகவே பா.ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகள் ஒன்றாக இணைந்து, மாணவர்களுக்கு விரோதமான இந்த தேர்வை எதிர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,125 மதிப்பெண்கள் பெற்றிருந்தும், ‘நீட்’ தேர்வினால் தனது மருத்துவ கனவு சிதைக்கப்பட்டதால் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள பெரவளூரை சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்ட கொடுஞ்செய்தி, சமூகநீதியில் அக்கறையுள்ள அனைவரின் இதயத்தையும் நொறுக்கியுள்ளது. கடந்த ஆண்டு, இதே ‘நீட்’ தேர்வின் கொடுமையினால், அரியலூர் மாணவி அனிதாவை இழந்தோம். இப்போது பெரவளூர் பிரதீபாவை இழந்து நிற்கிறோம்.

இருவருமே பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், தமிழகத்தில் தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டு, அதற்குரிய சட்டத்திருத்தம் முறைப்படி ஜனாதிபதியின் ஒப்புதலைப்பெற்ற காரணத்தால் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவ-மாணவிகளுக்கு எம்.பி.பி.எஸ்., பி.இ. உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான இடங்கள் முறையாக கிடைத்துவந்தன.

அதுமட்டுமின்றி தொழிற்கல்லூரிகளில் சேரும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் கட்டணம் இல்லாமல் படிப்பதற்கும் தி.மு.க. அரசு நல்ல வாய்ப்பினை உருவாக்கித் தந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பல மாணவ-மாணவிகள் டாக்டர்களாகவும், என்ஜினீயர்களாகவும் உருவாகினர். இந்த வாய்ப்புகளை பறித்து, எம்.பி.பி.எஸ். கனவை தகர்த்துள்ளது ‘நீட்’ தேர்வு. எனவே ‘நீட்’ தேர்வினை முழுமையாக ரத்து செய்யவேண்டும்.

அதற்கான சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் வரையில், தமிழ்நாட்டுக்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன், 2017-ல் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத்தரும் கடமையை மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றாமல், மாநிலத்தின் விருப்புரிமையை புறந்தள்ளியது. தமிழக அரசின் சட்ட மசோதாக்கள் மத்திய அமைச்சகத்தில் என்ன நிலையில் இருக்கிறது? என்பதுகூட தெளிவுபடுத்தப்படாமல், அலட்சியப்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து வலியுறுத்தி ஒப்புதல் பெறவேண்டிய மாநில ஆட்சியாளர்கள், எவ்வித அக்கறையுமின்றி இருக்கிறார்கள்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலுக்கு செவி சாய்க்காத மத்திய அரசின் வஞ்சகமும், மாநில அரசின் செயலற்ற தன்மையும், கடந்த ஆண்டில் அனிதாவின் உயிரைப் பறித்தது; இந்த ஆண்டு பிரதீபாவின் உயிரை பறித்துள்ளது. 2 பேருமே கிராமப்புற ஒடுக்கப்பட்ட ஏழை சமுதாயத்து மாணவிகள் என்பதிலிருந்தே, ‘நீட்’ தேர்வு என்பது சமூகநீதியின் கழுத்தை அறுக்கும் கொடிய ஆயுதம் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

‘நீட்’ கொடுமைக்கு பலியான பிரதீபாவை இழந்துவாடும் அவருடைய பெற்றோருக்கும், உற்றாருக்கும் தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு, இந்த உயிர் பலிக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்று, இப்போதாவது ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாக்களை நிறைவேற்றித்தந்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story