சென்னையில் பரவலாக திடீர் மழை மக்கள் மகிழ்ச்சி

சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக திடீர் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை
தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வபோது நல்ல மழை பெய்து வந்தாலும் சென்னையை மழை ஏமாற்றி வந்தது.
கத்திரி வெயில் முடிந்த பிறகும் சென்னையில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. கத்திரி வெயிலுக்கு பின்னர்தான் சென்னையில் வெப்பம் அதிகரித்தது.
சென்னையில் இன்று காலை முதலே வெயில் அதிகமாக வாட்டி வதைத்தது. இந்நிலையில் மதியம் 2 மணிக்கு சென்னையின் பல பகுதிகளில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து வானிலை மாறியது. வளசரவாக்கம், போரூர், உள்ளிட்ட இடங்களில் மழை மேகங்கள் திரண்டு மழை பெய்தது.
சென்னை மெரினா, வடபழனி, பூவிருந்தவல்லி, மாங்காடு, நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் பல இடங்களில் நல்ல மழை பெய்தது.
திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், எம்ஆர்சி நகர், பட்டினப்பாக்கம், விருகம்பாக்கம், முகப்பேர், உட்பட பல இடங்களில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது.
பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை பெய்தது . கோடையில் முதல் முறையாக சென்னையில் பரவலாக நல்ல மழை பெய்து உள்ளது.
சென்னையில் திடீர் மழையால் எழும்பூர் காவல் ஆணையர் அலுவலகம் எதிரே வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னை வேப்பேரி ஈவிகே சம்பத் சாலை மற்றும் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையிலும் மழை நீர் வெள்ளமாக ஓடியது.
புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், மகேந்திராசிட்டி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. மாமண்டூர், திம்மாவரம், ஆத்தூர், அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
Related Tags :
Next Story