பூமி குளிர்ந்ததால் மக்கள் மகிழ்ச்சி: சென்னையில் வெப்பத்தை தணித்த ‘திடீர்’ மழை சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது


பூமி குளிர்ந்ததால் மக்கள் மகிழ்ச்சி: சென்னையில் வெப்பத்தை தணித்த ‘திடீர்’ மழை சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
x
தினத்தந்தி 6 Jun 2018 9:00 PM GMT (Updated: 6 Jun 2018 8:39 PM GMT)

சென்னையில் நேற்று திடீரென மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சென்னை, 

சென்னையில் நேற்று திடீரென மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கனமழை

சென்னையில் நேற்று காலை வெயிலின் உக்கிரம் சற்று அதிகமாக இருந்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 102.2 டிகிரியும், மீனம்பாக்கத்தில் 104.18 டிகிரியும் வெயில் கொளுத்தியது.

இந்தநிலையில் மதிய நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. கருமேகங்கள் சூழ்ந்தன. மதியம் 2 மணியளவில் வானில் இருந்து சிறிய மழைத்துளிகள் விழத்தொடங்கின. சிறிது நேரத்தில் அது கனமழையாக மாறி பெய்தது. சில இடங்களில் பலத்த காற்றும் வீசியது.

சென்னை எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, கீழ்ப்பாக்கம், மெரினா, ஐஸ்அவுஸ், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, தியாகராயநகர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, திருவான்மியூர், அடையாறு, பெசன்ட்நகர், பெரம்பூர், கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, மூலக்கடை, புளியந்தோப்பு, சென்டிரல், அண்ணாநகர், திருமங்கலம், முகப்பேர், அம்பத்தூர் உள்பட நகர் முழுவதும், புழல், மாதவரம், செங்குன்றம், வேளச்சேரி, தரமணி, தாம்பரம், பல்லாவரம், மேடவாக்கம், ஊரப்பாக்கம் உள்பட புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டித்தீர்த்தது.

தத்தளித்த வாகனங்கள்

சென்னை நகரில் மதியம் 2 மணி முதல் 3.30 மணி வரை நீடித்த மழையால் பல இடங்களில் மழைநீர் சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை போன்ற இடங்கள் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டது. 2 அடி உயரத்தில் தண்ணீர் ஓடியது. அந்த சாலையில் வாகனங்கள் தத்தளித்தப்படி ஊர்ந்து சென்றன. சில வாகனங்களின் என்ஜீனுக்குள் தண்ணீர் புகுந்ததால், வாகன ஓட்டிகள் அந்த வாகனங்களை தள்ளியபடி சென்றதை காண முடிந்தது. கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. சில மணி நேரம் பெய்த மழைக்கே சாலைகள் வெள்ளக்காடானதால், சென்னை நகரம் பருவமழை காலத்தை எப்படி எதிர் கொள்ள போகிறது? என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்தது.

தாழ்வான குடியிருப்பு பகுதிகள், தெருக்களையும் மழைநீர் குளம் போன்று சூழ்ந்தது. கோடை வெயில் காலமா? அல்லது பருவமழை காலமா? என்று எண்ணும் அளவுக்கு சென்னை நகரின் வானிலை மாறி இருந்தது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

வெயிலின் கோர தாண்டவத்தில் இருந்து தப்பிக்க எப்போது மழை பெய்யும்? என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் நேற்று மழை கொட்டியதும் உற்சாகம் அடைந்தனர். மழைநீரில் பலர் உற்சாக குளியல் போட்டனர். வாகன ஓட்டிகள் பலரும் நனைந்தபடி வாகனங்களில் சென்றதை காண முடிந்தது. வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றனர்.

கடந்த சில வாரங்களாக சுட்டெரித்த வெயிலின் தாக்கத்தால் பெரும்பாலான வீடுகளில் மின் விசிறிகள், ஏர்கூலர், ஏ.சி. போன்ற மின்சாதனங்கள் ஓய்வின்றி ஓடிக்கொண்டு இருந்தன. இந்தநிலையில் மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசியதால் நேற்றிரவு மின்னணு சாதனங்களுக்கு ஓய்வு கிடைத்தது.

சென்னை நகரில் பெய்த திடீர் மழை பூமியை குளிர்வித்து, வெப்பத்தை தணித்ததால் பொதுமக்கள் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.

புறநகரில் பலத்த மழை

சென்னையை அடுத்த ஆலந்தூர், ஆதம்பாக்கம், பள்ளிக்கரணை, மீனம்பாக்கம், விமான நிலையம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, வேளச்சேரி, கிண்டி, பாலவாக்கம், அக்கரை, நீலாங்கரை உள்பட சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. சுமார் 20 நிமிடங்கள் பெய்த மழையால் சாலையில் உள்ள பள்ளங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

திடீர் மழையால் குடைகளை எடுத்துச்செல்லாத பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், வாகனங்களை ஆங்காங்கே சாலையோரம் நிறுத்திவிட்டு கடை மற்றும் வீடுகள் முன்பு ஒதுங்கி நின்றனர். மழை நின்றதும் புறப்பட்டு சென்றனர்.

இதேபோல் திருவொற்றியூர், எண்ணூர், மணலி, பாரிமுனை, கொத்தவால்சாவடி பகுதிகளிலும் அரை மணிநேரம் மழை பெய்தது. பூந்தமல்லி, மதுரவாயல், குரோம்பேட்டை, பம்மல், அனகாபுத்தூர், சேலையூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

இன்று மழை பெய்யும்

மழை குறித்து சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 3 செ.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 2 செ.மீ. மழையும் நேற்று மாலை பெய்துள்ளது.

தமிழகத்தில் சில இடங்களில் இன்று (வியாழக்கிழமை) மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். மாலை நேரத்தில் சென்னையின் சில பகுதிகளில் மழை பெய்யும்.

இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

Next Story