தூத்துக்குடிக்கு ரகசியமாக வந்தார் துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் விஜய்


தூத்துக்குடிக்கு ரகசியமாக வந்தார் துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் விஜய்
x
தினத்தந்தி 6 Jun 2018 11:30 PM GMT (Updated: 6 Jun 2018 8:45 PM GMT)

தூத்துக்குடிக்கு ரகசியமாக வந்த நடிகர் விஜய், துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்று ஆறுதல் கூறியதோடு, தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடிக்கு ரகசியமாக வந்த நடிகர் விஜய், துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்று ஆறுதல் கூறியதோடு, தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

துப்பாக்கி சூடு

தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்தினரை பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.

இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக நடிகர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணிக்கு மதுரையை வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடியில் உள்ள அவரது உறவினர் பிரிட்டோ என்பவர் வீட்டுக்கு வந்தார்.

நடிகர் விஜய் ஆறுதல்

தூத்துக்குடிக்கு ரகசியமாக வந்த நடிகர் விஜய் பின்னர் நள்ளிரவில் தனது உறவினர் மோட்டார் சைக்கிளை ஓட்ட, பின்னால் அமர்ந்து கொண்டார். அவர் ரோட்டில் செல்லும்போது, முகத்தில் துணியை கட்டியபடி சென்றார். அப்போது, பிரிட்டோவின் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 2 பேர் அவர்களுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பாக சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து விஜய் சென்றார்.

அவர் துப்பாக்கி சூட்டில் பலியான லயன்ஸ் டவுனை சேர்ந்த சுனோலின், திரேஸ்புரத்தை சேர்ந்த ஜான்சி, லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த கிளாஸ்டன் உள்ளிட்டோர் வீடுகளுக்கு சென்றார். அங்கிருந்த அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். நள்ளிரவு நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நடிகர் விஜய் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அதிகாலையில் மதுரைக்கு சென்று, அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றார்.

மகன்போல்...

இதுகுறித்து சுனோலின் தாயார் வனிதா கூறியதாவது:-

வீட்டு வாசலில் அமர்ந்து மகளை நினைத்து வேதனைப்பட்டு அழுது கொண்டு இருந்தோம். அப்போது 2 மோட்டார் சைக்கிள்கள் வந்தது. அதில் இருந்து நடிகர் விஜய் இறங்கி வந்தார். இதனால் நாங்கள் வீட்டுக்குள் சென்றோம். அவர் எங்கள் வீட்டுக்குள் வந்து தரையில் அமர்ந்து எங்களின் அனுதாபத்தில் பங்கெடுத்தார். நேரம் பிந்தி வந்ததால் எங்களை தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். உங்களை தொந்தரவு செய்து இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். பின்னர் மோட்டார் சைக்கிளில் ஏறி சென்றுவிட்டார். அவர் ஒரு மகன் போல் மிகவும் எளிமையாக வந்து எங்கள் கஷ்டத்தில் பங்கெடுத்துவிட்டு சென்றார்.

இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.

Next Story