காவிரி மேலாண்மை ஆணையம் பற்றிய கருத்துக்காக ‘காலா படத்தை திரையிடக்கூடாது என்பது சரியல்ல’ நடிகர் ரஜினிகாந்த் பேட்டி


காவிரி மேலாண்மை ஆணையம் பற்றிய கருத்துக்காக ‘காலா படத்தை திரையிடக்கூடாது என்பது சரியல்ல’ நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 7 Jun 2018 4:30 AM IST (Updated: 7 Jun 2018 2:19 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக கருத்து தெரிவித்ததற்கு காலா படத்தை திரையிடக்கூடாது என்று சொல்வது சரியல்ல என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சென்னை, 

காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக கருத்து தெரிவித்ததற்கு காலா படத்தை திரையிடக்கூடாது என்று சொல்வது சரியல்ல என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சென்னை போயஸ்கார்டனில் உள்ள தன்னுடைய இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

என்ன தவறு?

‘காலா’ படம் கர்நாடகாவில் திரையிடக்கூடாது என்று சிலர் போராட்டம் செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு என்ன சொன்னதோ? அதை கர்நாடக அரசு செய்ய வேண்டும் என்று தான் நான் சொன்னேன். இதில் என்ன தவறு இருக்கிறது? என்று எனக்கு தெரியவில்லை.

அணைக்கட்டுகள் அந்த ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

சரியல்ல

இதற்காக படத்தை திரையிடக்கூடாது என்பது சரியல்ல. கர்நாடக திரைப்பட வர்த்தக சபை இதற்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

வர்த்தக சபையின் வேலை என்பது படத்தை தயாரிப்பவர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்து கொள்வது தான். ஆனால் அவர்களே என் படத்தை திரையிடக்கூடாது என்பது எனக்கு சரியாக தோன்றவில்லை.

ஒத்துழைக்க வேண்டும்

ஏதோ வீம்புக்காக படத்தை திரையிடுகிறோம் என்று இல்லை. ஆண்டவன் புண்ணியத்தால் உலகம் முழுவதும் படம் திரையிடப்பட இருக்கிறது. கர்நாடகாவில் மட்டும் இந்த காரணத்துக்காக திரையிடவில்லை என்று தெரியவந்தால் கர்நாடகத்துக்கே அது நன்றாக இருக்காது. அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

படம் திரையிடும்போது தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அதை அந்த மாநில முதல்-மந்திரி குமாரசாமி செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. மக்கள் வந்து படத்தை பார்க்கட்டும். போராட்டக்காரர்கள் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் இறுதியில் தமிழில் கூறிய கருத்துகளை சுருக்கமாக நடிகர் ரஜினிகாந்த் கன்னட மொழியில் தெரிவித்தார்.

Next Story