காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கு நீர் தேவைப்படுவதால் காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மேட்டூர் அணை
இது குறித்து மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5-ந் தேதி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 1-ந் தேதியன்று காவிரி மேலாண்மை திட்டத்தை மத்திய அரசிதழில் வெளியிட்டதற்கு உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி, பொதுவாக ஜூன் மாதத்தில் தொடங்கும்.
டெல்டா பகுதி சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்புதான் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. பாரம்பரியமாக ஜூன் 12-ந் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும்.
திறக்கப்படவில்லை
ஆனால் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இதுவரை மேட்டூர் அணை இந்த தேதியில் திறக்கப்பட முடியாத சூழ்நிலையில் உள்ளது. கர்நாடகாவில் இருந்து நீர் திறக்கப்படவில்லை என்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாரம்பரியமாக பயிரிடும் குறுவை சாகுபடியை விவசாயி கள் துறந்துவிட நேரிடுகிறது.
எனவே காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவையும் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதாவது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி (சுப்ரீம் கோர்ட்டினால் சற்று திருத்தப்பட்ட தீர்ப்பு), குறுவை சாகுபடிக்கு நீர் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவை உறுதி செய்ய வேண்டும்.
உடனடியாக கூட்ட வேண்டும்
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தமிழக அரசு சார்பிலான உறுப்பினர்களின் பெயரை மத்திய அரசுக்கு தமிழக அரசு ஏற்கனவே அனுப்பிவிட்டது. எனவே அதன் தலைவர் மற்றும் வேறு மாநில உறுப்பினர்களை நியமித்து, காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக கூட வழிவகை செய்ய வேண்டும்.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் நீர் திறப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் விவசாயிகளின் ஏக்கத்தை தீர்க்க வேண்டும். எனவே காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும் முழு அளவில் செயல்பட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உறுதி செய்ய வேண்டும்
குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் முதல் மாதாந்திர ரீதியிலோ அல்லது தினசரியாக 10 நாட்களுக்கோ காவிரி நீரை திறந்து விடுவதை உறுதி செய்ய வேண்டும். நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி, மீதமுள்ள பாசன காலகட்டத்துக்கும் நீர் திறப்பை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்வது அவசியமாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story