பெட்ரோல் , டீசல் மீதான வரி குறைக்கப்படுமா? சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் தகவல்


பெட்ரோல் , டீசல் மீதான வரி குறைக்கப்படுமா? சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் தகவல்
x
தினத்தந்தி 6 Jun 2018 10:45 PM GMT (Updated: 2018-06-07T03:25:10+05:30)

பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு குறித்து சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை, 

பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு குறித்து சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகமது அபுபக்கர் ஆகியோர் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

அப்போது எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டுகிற அளவுக்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. விலை நிர்ணயம் செய்யக்கூடிய உரிமையை ஆயில் கம்பெனிகள் தினமும் விலையேற்றத்தை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இதனால் அலுவலகம் செல்வோர், வர்த்தகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், லாரி தொழிலாளர்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அண்டை மாநிலமான கேரளாவில் கூட பெட்ரோலுக்கும், டீசலுக்கும் கடந்த 1-ந் தேதியிலிருந்து ஒரு ரூபாய் குறைத்து இருக்கிறார்கள். ஆகையால், தமிழக அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு மாநில அரசுக்கென்று இருக்கின்ற அதிகாரத்திற்கு உட்பட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதில் அளித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

சென்னையில் விலை குறைவு

கேரள மாநிலத்தில் பெட்ரோல் மீது இருந்த மதிப்புக்கூட்டு வரி 31.8 சதவீதம், டீசல் மீதான வரி 24.5 சதவீதம். ஜூன் முதல் தேதியிலிருந்து இந்த வரி பெட்ரோல் மீது 30.11 சதவீதமாகவும், டீசல் மீது 22.77 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்குமேல் கேரளாவில் பெட்ரோல், டீசல் மீது மேல் வரியும் விதிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தற்போது பெட்ரோல் மீது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி 34 சதவீதம். டீசல் மீது மதிப்புக்கூட்டு வரி 25 சதவீதம். கேரளாவைப் போல், தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மேல் வரி விதிக்கப்படுவதில்லை.

கேரளாவில் இந்த வரி குறைப்பு செய்த பின்பு, அதாவது, ஜூன் 5-ந் தேதி நிலவரப்படி, பெட்ரோலின் சில்லரை விலை, லிட்டருக்கு ரூ.81.01. டீசல் லிட்டருக்கு ரூ.73.76.

அதே சமயம், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு சில்லரை விலை 80.84 ரூபாயாகவும், டீசல் விலை, லிட்டருக்கு 72.76 ரூபாயாகவும் உள்ளது. அதாவது கேரளாவில் உள்ள சில்லரை விலையைவிட, சென்னையில் பெட்ரோல், டீசலுக்கான சில்லரை விலை குறைவாகத்தான் உள்ளது.

மாநில அரசின் கட்டுப்பாட்டில்...

ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி, தமிழ்நாட்டை விட கூடுதலாகவே உள்ளது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள், அடிப்படை விலையை அவ்வப்போது மாற்றி நிர்ணயிக்கின்றன. தற்போது இந்த விலை ஏறுமுகமாக உள்ளதால், விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறையும்போது, இந்த விலையும் குறையும்.

எனவே இந்த ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றாற்போல், மதிப்புக்கூட்டு வரியை மாற்றி அமைப்பது, இயலாத ஒன்று. பொருட்கள் மற்றும் சேவை வரிகள் அமலாக்கப்பட்ட பின், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வரிகள், பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியும், மதுபானங்கள் மீதான வரிகள் மட்டுமே நம் அதிகாரத்தில் இருக்கிறது.

மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்

பொருட்கள் மற்றும் சேவை வரியிலும், 2017-2018-ம் ஆண்டுக்கான இழப்பீடு 1,120 கோடி ரூபாய் இன்னும் நிலுவையில் வராமல் உள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான பொருட்கள் மற்றும் சேவை வரியிலும், நமது மாநிலத்திற்கு 2017-2018-ல் கிடைக்க வேண்டிய முழுத் தொகையையும், மத்திய அரசு இதுவரை பகிர்ந்து அளிக்கவில்லை. இந்நிலையில் மத்திய நிதிக்குழு மூலம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியிலும், பதிநான்காவது நிதிக்குழு காலத்தில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் நிதியும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாநில அரசு சந்தித்து வரும் வருவாய் பற்றாக்குறையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 2017-2018-ல் வருவாய் பற்றாக்குறை 18,370 கோடி ரூபாய் எனவும், 2018-2019-ல் வருவாய் பற்றாக்குறை 19,374 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில அரசு பெற்று வரும் வரி வருவாயைக் கொண்டு தான் மாநில நிர்வாகத்தை நடத்தி, திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியுள்ளது. இத்தகைய நிலை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.

சூழ்நிலைக்கேற்ப முடிவு

எனவே, கேரளாவின் சூழ்நிலை வேறு. நமது மாநிலத்தின் சூழ்நிலை வேறு. எனவே கேரளா வரிக் குறைப்பு செய்ததைப்போல், நாமும் செய்ய முடியுமா என்பதைக் கூர்ந்து பரிசீலிக்க வேண்டும். மேலும் இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் கலந்தாலோசனை செய்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Next Story