‘பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை திரும்ப பெற வேண்டும்’ பிளாஸ்டிக் சங்கம் கோரிக்கை


‘பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை திரும்ப பெற வேண்டும்’ பிளாஸ்டிக் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 7 Jun 2018 9:00 PM GMT (Updated: 7 Jun 2018 7:42 PM GMT)

அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை திரும்ப பெற வேண்டும் என்று பிளாஸ்டிக் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.

சென்னை,

தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் தலைவர் ஜி.சங்கரன் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் ஆகியோர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் கூறியதாவது:-

தமிழகத்தில் 10 ஆயிரம் பதிவு பெற்ற பிளாஸ்டிக் நிறுவனங்களும், 12 ஆயிரம் பதிவு பெறாத நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 95 சதவீத நிறுவனங்கள் சிறு மற்றும் குறுந்தொழில் வகையைச் சேர்ந்தவை.

இவற்றின் மூலம் நேரடியாக 2 லட்சம் பேரும், மறைமுகமாக 3 லட்சம் பேரும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். அவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்.

கந்து வட்டிக்கு கடன் வாங்கி, எந்திரங்களை கொள்முதல் செய்து, தொழிலை செய்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர். சிலர், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் கடன் பெற்று தொழில் செய்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இது பிளாஸ்டிக் தொழில் செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

திரும்ப பெற வேண்டும்

இந்த அறிவிப்பானது தமிழகத்தில் உள்ள சிறு மற்றும் குறு பிளாஸ்டிக் தொழில் முனைவோர்கள் இடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பல லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனால் பிளாஸ்டிக் தொழிலை நம்பி இருக் கும் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அமைத்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில், இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

கடந்த 2004-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிளாஸ்டிக் தடை மசோதா தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, உண்மை நிலையை தெரிந்து கொண்டதால் அந்த மசோதாவை அவர் அமல்படுத்தவில்லை.

எனவே முன்னாள் முதல்-அமைச்சர் செய்ய விரும்பாத செயலை, தற்போதைய முதல்-அமைச்சர் செய்யாமல், 110-விதியின் கீழ் அறிவித்த பிளாஸ்டிக் தடை அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story