மெட்ரோ ரெயில் பணிகளில் ‘புதுமையான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’ மத்திய அரசு செயலாளர் பேச்சு


மெட்ரோ ரெயில் பணிகளில் ‘புதுமையான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’ மத்திய அரசு செயலாளர் பேச்சு
x
தினத்தந்தி 7 Jun 2018 10:30 PM GMT (Updated: 7 Jun 2018 7:55 PM GMT)

மெட்ரோ ரெயில் பணிகளில் முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சக செயலாளர் கூறினார்.

சென்னை,

நாட்டில் பல்வேறு பெருநகரங்களில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் நிறுவன பணிகளின் முன்னேற்றம் குறித்த காலாண்டு ஆய்வு கூட்டம், சென்னை, கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சக செயலாளர் துர்காசங்கர் மிஸ்ரா தலைமை தாங்கினார்.

இதில் மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனர்கள் பங்கஜ்குமார் பன்சால் (சென்னை), என்.வி.எஸ்.ரெட்டி (ஐதராபாத்), மங்கு சிங் (டெல்லி), ஐ.பி.கவுதம் (ஆமதாபாத்), ஏ.பி.எம். முகமது ஹனீஸ் (கொச்சி), அஸ்வினி பீட் (மும்பை) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் துர்காசங்கர் மிஸ்ரா பேசியதாவது:-

நாட்டில் சென்னை, கொச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு நடந்து வரும் பணிகளில் பல புதுமையான மற்றும் முன்மாதிரியான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறிப்பாக ஒரே ரெயில் நிலையத்தில் 2 வழித்தடங்களுக்கான பாதைகள் அமைப்பது, குறுகிய இடத்தில் சுரங்க ரெயில் பாதையில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை செய்து தருவது போன்ற பணிகளை அனைத்து நிர்வாக இயக்குனர்களும் கடைபிடிக்க வேண்டும்.

அதேபோன்று குறுகிய இடங்களில் அதிக மரங்களை நடும் ஜப்பானிய தொழில்நுட்பமான ‘மியா வாகி’ முறையில் மெட்ரோ ரெயில் நிலையங்கள், பணிமனை மற்றும் தலைமை அலுவலகங்களில் அதிக மரங் களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மெட்ரோ ரெயில் சேவையை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக துர்காசங்கர் மிஸ்ரா மற்றும் மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனர்கள் கோயம்பேட்டில் உள்ள சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன பணிமனையில் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகளை பார்வையிட்டனர்.

பின்னர் அனைவரும் பணிமனையில் இருந்து ரெயிலில் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு சென்றனர். அங்கு புதுமையான முறையில் 2 அடுக்குகளில் அமைக்கப்பட்டு உள்ள முதல் மற்றும் 2-வது வழித்தட பாதைகளை பார்வையிட்டனர்.

பின்னர், சுரங்க ரெயில் நிலையங்களிலேயே மிகவும் சிறிய ரெயில் நிலையமான நந்தனம் மெட்ரோ நிலையத்துக்கு சென்று அந்த ரெயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ள முறைகளை அவர்கள் பார்வையிட்டனர். இந்த ரெயில் நிலையத்தில் பயணிகள் நிற்கும் பகுதி மற்றும் ரெயில் பாதைகள் மட்டுமே சுரங்கத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளன.

மின்சார வசதி அளிக்கும் அறைகள், ஓய்வு அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் நந்தனம் ரெயில் நிலையத்தின் மேலே அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு என்ஜினீயர்கள் விளக்கம் அளித்தனர். 

Next Story