காவிரி பற்றி பேசுவதற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அதிகாரம் இல்லை பி.ஆர்.பாண்டியன் பேட்டி


காவிரி பற்றி பேசுவதற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அதிகாரம் இல்லை பி.ஆர்.பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 7 Jun 2018 10:00 PM GMT (Updated: 7 Jun 2018 8:02 PM GMT)

காவிரி பற்றி பேசுவதற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அதிகாரம் இல்லை என்று விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

அடையாறு,

சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஒரு மனு அளித்தார்.

அதில், திருவாரூரில் வருகிற 12-ந் தேதி காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி உண்ணாவிரதம் நடத்த அனுமதி கேட்டு திருவாரூர் நகர காவல் ஆய்வாளரிடம் விண்ணப்பித்தோம். அதற்கு திருவாரூர் துணை காவல் கண்காணிப்பாளர் 28 கேள்விகளை அனுப்பியுள்ளார். நாங்கள் அரசியல் கட்சி இல்லை, இது ஒரு சேவை அமைப்பு. எனவே 12-ந் தேதி உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பின்னர் வெளியே வந்த பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கமல்ஹாசன் முதிர்ச்சி பெற்றவராக இருப்பார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவர் முதிர்ச்சியற்றவர் என தெளிவுபடுத்திவிட்டார். உச்சநீதிமன்ற தீர்ப்பை ஒதுக்கிவிட்டு இருமாநில மக்களும் அமர்ந்து பேசிக்கொள்ளலாம் என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது.

அவரின் சொந்த விருப்பமாக கர்நாடக முதல்-மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்றால் அது ஏற்கத்தக்கதல்ல. அவருக்கு அந்த அதிகாரம் இல்லை. இதனை மறைமுகமாக பலமுறை சொல்லியும் அதை ஏற்கமறுத்த நடவடிக்கை முதிர்ச்சியற்றது. சட்ட தீர்வு தான் காவிரிக்கு வேண்டும் என்பதில் டெல்டா விவசாயிகள் உறுதியாக உள்ளோம்.

ரஜினிகாந்த் காலா படத்திற்காக காவிரியை அடகுவைப்பாரேயானால், அவர் இங்கிருந்து வெளியேற வேண்டும். ஆனால் அவருக்கு அதிகாரமும் இல்லை, அவரது கருத்துகளால் காவிரி உரிமை பறிபோகும் என்ற நிலைமையும் இல்லை. ரஜினியும், கமலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரத்தை மீறியவர்கள் இல்லை.

ரஜினி தமிழக அரசியலை நிர்ணயிக்கப்போவதும் இல்லை, அதிகாரத்திற்கு வரப்போவதும் இல்லை. எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது.

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார். 

Next Story