மாநில செய்திகள்

மணல் உபயோகத்தை உடனடியாக நிறுத்த முடியாது சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு + "||" + Edappadi palanisami speech in assembly

மணல் உபயோகத்தை உடனடியாக நிறுத்த முடியாது சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

மணல் உபயோகத்தை உடனடியாக நிறுத்த முடியாது
சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
தமிழகத்தில் மணல் உபயோகத்தை உடனடியாக நிறுத்த முடியாது என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை, 

தமிழக சட்டசபையில் நேற்று நடந்த விவாதத்தின்போது எம்சாண்ட் பற்றி தி.மு.க. எம்.எல்.ஏ. (சிங்காநல்லூர்) கார்த்திக் கேள்வி எழுப்பினார். மக்களுக்கு அதுபற்றிய விழிப்புணர்வு உள்ளதா என்றும், எம்சாண்ட் பெயரில் தூசு கலந்து விற்பனை செய்யப்படுகிறதா என்றும் கார்த்திக் கேட்டார்.

அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் வருமாறு:-

ஆற்று மணல் மற்றும் ஓடையில் இருக்கிற மணல் எல்லாம் கட்டுமானத்திற்காக மூன்று ஆண்டுகளிலே தடை செய்யப்பட்டு படிப்படியாக, எம்சாண்டை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு அறிவித்தது.

ஆனால், உங்களுடைய ஆட்சியிலும் ஆற்றிலிருந்து மணல் அள்ளப்பட்டு, கட்டுமான தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டது. அ.தி.மு.க. அரசிலும் கட்டுமானத்துக்கு ஆற்றிலும், ஓடையிலும் மண் அள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஏனென்றால், மணல் என்பது முக்கியமான அத்தியாவசியமான பொருள். கட்டுமான தொழிலுக்கு நிச்சயம் அது தேவைப்படுகிறது. பொதுமக்களை பொறுத்தவரைக்கும், உடனடியாக எம்சாண்டை பயன்படுத்த இயலாத சூழ்நிலை இருக்கிறது.

கடந்த காலத்திலே, 10 சதவீதம் எம்சாண்டைத்தான் மக்கள் பயன்படுத்தி வந்தார்கள். விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக, இப்போது 40 சதவீதம் பேர் எம்சாண்டை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.

இன்னும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி 100 சதவீதம் எம்சாண்ட்டை பயன்படுத்தக் கூடிய அளவிற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

எத்தனை பேருக்கு இந்த எம்சாண்ட் தயாரிக்கின்ற உரிமத்தை வழங்கியிருக்கிறீர்கள் என்ற கேள்வியையும் அவர் கேட்டுள்ளார். தமிழகத்தில் மொத்தம் 24 எம்சாண்ட் உற்பத்தி நிறுவனங்களுக்கு பொதுப்பணித்துறையின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது.

யார் யாரெல்லாம் இந்த எம்சாண்ட் தயாரிப்பதற்கான ஆலைகளை நிறுவுகின்றார்களோ, அவர்களுக்கு எல்லாம் அரசு தாராளமாக உரிமை வழங்கும். அதாவது, அரசு நிர்ணயிக்கப்பட்ட விதிக்கு உட்பட்டு அவர்கள் விண்ணப்பம் செய்தால், அவர்களுக்கு அந்த உரிமத்தை வழங்குவதற்கு அரசு தயாராக இருக்கிறது.

இது மக்களுக்கு ஒரு அத்தியாவசியமான பொருள். கட்டுமான தொழிலுக்கு மிக மிக முக்கியமானது மணல். உடனடியாக நிறுத்த முடியாது.

அரசாங்கத்தில் பல்வேறு கட்டுமானத் தொழில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. பொதுப்பணித் துறையாக இருந்தாலும் சரி அல்லது நெடுஞ்சாலைத் துறையாக இருந்தாலும், கட்டுமானத்திற்கு தேவையான மணல் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

அதேபோல, பல்வேறு கட்டிடங்கள் இன்றைக்கு தமிழகத்திலே கட்டப்பட்டு வருகின்றது. அதற்கும் இந்த மணல் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்ல, ஏழை-எளிய மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கு மணல் மிக மிக முக்கியம்.

ஆகவே, இதையெல்லாம் கருத்திலே கொண்டுதான் ஆற்றிலும், ஓடையிலும் அரசு விதிகளுக்கு உட்பட்டு, அந்த மணலை அள்ளி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்து பொதுமக்களுக்கு தேவையான மணல் வாங்குவதற்கும், அரசு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே, வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்வதற்கு, டெண்டர் விடப்பட்டு, டெண்டரை பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.