காலா படத்துக்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


காலா படத்துக்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 7 Jun 2018 10:30 PM GMT (Updated: 7 Jun 2018 8:08 PM GMT)

காலா படம் மட்டும் இல்லாமல் எந்த திரைப்படமாக இருந்தாலும், அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஆலந்தூர்,

தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி கலன்களுக்கு மாற்றாக, 50 சதவீத அரசு மானியத்துடன் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு பைபர் படகுகள், ஐஸ் பெட்டிகள், மீன்பிடி வலைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதில் முதல் கட்டமாக 10 மீனவர்களுக்கு பைபர் படகுகள், ஐஸ் பெட்டிகள், மீன்பிடி வலை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சின்ன நீலாங்கரையில் நடந்தது. மீனவர்களுக்கான பைபர் படகு உள்பட பொருட்களை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கி, கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் அ.தி.மு.க. எம்.பி.ஜெயவர்த்தன், முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், நீலாங்கரை முனுசாமி, பெரும்பாக்கம் ராஜசேகர், கே.பி.கந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

அதிக கட்டணம்

நான் மக்களுக்கு பி.ஆர்.ஓ.வாக இருப்பது சந்தோசமாக உள்ளது. ஆனால் கமல்ஹாசன் தெருக்கோடியில் ஒருவராகத்தான் இருக்க முடியும். காலா படம் மட்டும் இல்லாமல் எந்த திரைப்படமாக இருந்தாலும், அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் எங்களுடைய கருத்து. தமிழக அரசு தனது உணர்வை வெளிப்படுத்தி உள்ளது. நீட் விவகாரத்தில் மற்ற மாநிலங்களும் குரல் எழுப்பினால்தான் மாற்றம் ஏற்படும். மத்திய அரசுடன் கட்சி ரீதியாக எந்த இணக்கமும் இல்லை. ஆனால் தமிழகத்தின் நலனுக்காக மத்திய அரசுடன் ஒத்துப்போவது ஊதுகுழல் கிடையாது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை கமிஷன்தான் பதில் அளிக்கவேண்டும். விசாரணை கமிஷன் என்ன அறிக்கை தருகிறதோ அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story