நிர்மலாதேவிக்கு மதுரை மத்திய சிறையில் குரல் பரிசோதனை விருதுநகர் கோர்ட்டு அனுமதி


நிர்மலாதேவிக்கு மதுரை மத்திய சிறையில் குரல் பரிசோதனை விருதுநகர் கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 7 Jun 2018 8:15 PM GMT (Updated: 7 Jun 2018 8:15 PM GMT)

மதுரை மத்திய சிறையில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு குரல் பரிசோதனை நடத்த, விருதுநகர் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

விருதுநகர், 

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசி, தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் அவர் விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் நிர்மலா தேவியின் குரல் மாதிரி பரிசோதனை நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீது விசாரணை நடத்த, நிர்மலாதேவியை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி உத்தரவிட்டார். அதன்படி, நேற்று மதியம் நிர்மலாதேவி மீண்டும் விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, நிர்மலாதேவிக்கு இம்மாதம் 21-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

அத்துடன் அவரது குரல் மாதிரி பரிசோதனையை, மதுரை மத்திய சிறையில் வைத்து நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, போலீசார், நிர்மலாதேவியை மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story