நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் சேது சமுத்திர திட்டத்தை அரசு நிறைவேற்றும் எடப்பாடி பழனிசாமி தகவல்


நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் சேது சமுத்திர திட்டத்தை அரசு நிறைவேற்றும் எடப்பாடி பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 7 Jun 2018 10:30 PM GMT (Updated: 2018-06-08T01:56:50+05:30)

நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் சேது சமுத்திர திட்டத்தை அரசு நிறைவேற்றும் என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை, 

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் தொழில் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கியது. விவாதத்தை தொடங்கிவைத்து தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

டி.ஆர்.பி.ராஜா:- தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூரில் மெகா உணவு பூங்கா அமைக்க முன்வர வேண்டும். குறைந்த அளவு நீரில் விளையும் புதிய ரக கரும்பை அறிமுகம் செய்ய வேண்டும். நீரா பானத்தை போல், தேங்காயில் இருந்து சர்க்கரை உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும். தேங்காய் சர்க்கரை, சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. அரசே கொள்முதல் செய்து விற்க வேண்டும்.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மாற்று வழியிலாவது அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- சேது சமுத்திரம் திட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்.

டி.ஆர்.பி.ராஜா:- தமிழ்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை அவசியம்தான். ஆனால், ஆயுதம் வாங்குவதற்கான மத்திய அரசின் நிதி குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆலைகளில் வாங்கும் பொருட்களின் அளவு குறையும். பணிபுரியும் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.

அமைச்சர் கா.பாண்டியராஜன்:- ஓசூர் முதல் கோவை வரை ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை அமைய இருக்கிறது. இதன் மூலம் குறைந்தது 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். 100 நிறுவனங்கள் வர இருக்கின்றன.

டி.ஆர்.பி.ராஜா:- பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இனி, மின்சார வாகனங்கள் தான் இயங்கப் போகிறது. எனவே, மின்னேற்றும் (இ-சார்ஜிங்) நிலையங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

அமைச்சர் எம்.சி.சம்பத்:- தமிழகத்தில் உள்ள போர்டு, ஹூண்டாய் போன்ற கார் நிறுவனங்கள் மின்சார கார்களை தயாரிக்க இருக்கின்றன. ஆண்டுக்கு 10 லட்சத்து 90 ஆயிரம் கார்கள் உற்பத்தி செய்யப்படும்.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்:- தமிழ்நாட்டில் 200 பேட்டரி பஸ்களை இயக்க அரசு முடிவு செய்து மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளது. பேட்டரி பஸ் ஒன்று வாங்க ரூ.2 கோடி செலவாகும். ஆனால், பேட்டரி பஸ்களில் தொடர்ந்து புதிய தொழில்நுட்பம் வந்து கொண்டே இருக்கிறது. அதனால், காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, பேட்டரி பஸ்சின் விலையும் ரூ.1½ கோடியாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் 200 பஸ்கள் வாங்க மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளோம். பேட்டரிகளை தனியாக வாங்கினால், விலை குறைவாக கிடைக்கும் என்று சொல்கிறார்கள். தமிழகத்தில் வருங்காலங்களில் பேட்டரி பஸ், பேட்டரி கார் அதிக அளவில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

டி.ஆர்.பி.ராஜா:- பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை அவசர கதியில் நடந்துள்ளதா?. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிளாஸ்டிக் பூங்கா தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அப்படி இருக்கும்போது எப்படி பிளாஸ்டிக் பொருட்களை தடுக்க முடியும்?.

எதிர்க்கச்ட்சி துணைத் தலைவர் துரைமுருகன்:- எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் எனது தொகுதியில் (காட்பாடி) டெல் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இப்போது, அந்தச் தொழிற்சாலை மூடிக்கிடக்கிறது. 90 ஏக்கர் அளவுக்கு அங்கு இடம் உள்ளது. அதை விற்கப்போவதாக செய்தி வருகிறது.

அமைச்சர் எம்.சி.சம்பத்:- டெல் தொழிற்சாலை நலிவடைந்ததால் அடைக்கப்பட்டது. இன்று வரை அரசிடம்தான் உள்ளது. அந்த இடத்தை யாருக்கும் விற்பனை செய்யவில்லை. பொன்னேரியில் தொடங்கப்படும் பிளாஸ்டிக் பூங்காவில், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையிலான பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- பிளாஸ்டிக் பூங்காவில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எதுவும் உற்பத்தி செய்யப்படாது.

இவ்வாறு விவாதம் நடந்தது. 

Next Story