மு.க.ஸ்டாலின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது ஏன்? சபாநாயகர் விளக்கம்


மு.க.ஸ்டாலின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது ஏன்? சபாநாயகர் விளக்கம்
x
தினத்தந்தி 7 Jun 2018 11:45 PM GMT (Updated: 2018-06-08T02:00:10+05:30)

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது ஏன்? என்பதற்கு சபாநாயகர் விளக்கம் அளித்தார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து பேச தொடங்கினார். ஆனால் அவருக்கு சபாநாயகர் வாய்ப்பு தர மறுத்தார்.

மு.க.ஸ்டாலின் மீண்டும், மீண்டும் வாய்ப்பு கேட்கவே, விசாரணை கமிஷனுக்கு பாதிப்பு வரும் வகையில் உரை அமைந்தால் அவற்றை நீக்கி விடுவேன் என்ற நிபந்தனையுடன் மு.க.ஸ்டாலினுக்கு, சபாநாயகர் வாய்ப்பு வழங்கினார்.

அதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக பேச தொடங்கினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், ‘உங்கள் கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறேன். நீங்கள் இந்த கருத்துக்களை விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கலாம். முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து விளக்கம் பெறலாம்’ என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், ‘முதல்- அமைச்சரிடம் நேரில் தெரிவிக்க வேண்டும் என்றால், சட்டசபைக்கு வர வேண்டிய அவசியம் என்ன?. இந்த விஷயத்தை சட்டசபையில் பேசாமல் வேறு எங்கு பேசுவது?’ என்றார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் பேசியதாவது:-

எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும், அது விசாரணை ஆணையத்தில் இருக்கும் போது அதைப்பற்றி அவையில் விவாதிக்கவோ, பேசவோ முடியாது. இதை விதி எண் 92 தெளிவாக கூறுகிறது. இந்த விதிக்கு மாறாக எதிர்க்கட்சித்தலைவர் பேசியதால் அவரின் பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ஸ்டெர்லைட் பிரச்சினை சம்பந்தமாக நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து முழு விசாரணை மேற்கொள்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலே விசாரணை தொடங்கப்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த பிரச்சினை குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆகவே, நீதிமன்றத்திலே வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு சம்பவத்தை பற்றி, பொருளைப் பற்றி, அவையிலே விவாதிப்பது, மரபல்ல. தி.மு.க. ஆட்சியிலே, அப்பொழுது அமைச்சராக இருந்து, தற்போது சட்டமன்ற துணைத் தலைவராக இருக்கின்ற துரைமுருகனே இதைப்பற்றி சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

அதன் அடிப்படையிலே, எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும், எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும், இது தொடர்பாக விசாரணை கமிஷனிலே அளிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story