அடுத்த ஆண்டு ஜனவரி 23, 24-ந் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு எம்.சி.சம்பத் அறிவிப்பு


அடுத்த ஆண்டு ஜனவரி 23, 24-ந் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு எம்.சி.சம்பத் அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Jun 2018 11:45 PM GMT (Updated: 7 Jun 2018 9:26 PM GMT)

2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23 மற்றும் 24-ந் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபையில் தொழில்துறை மானியக் கோரிக்கை மீது நேற்று எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அந்தத் துறையின் அமைச்சர் எம்.சி. சம்பத் பதிலளித்துப் பேசினார். அவர் கூறியதாவது:-

சென்னைக்கு அருகில் ஸ்ரீபெரும்புதூரில் 250 ஏக்கர் நிலப்பரப்பில் வானூர்திகள் மற்றும் பாதுகாப்புத் துறை தளவாடங்கள் உற்பத்திப் பூங்காவிற்கு கடந்த 25.10.2017 அன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இந்த வானூர்தி பூங்காவில், முதற்கட்டமாக 180 கோடி ரூபாய் முதலீட்டில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் வானூர்தி, உயர் கணினி மற்றும் பொறியியல் வடிவமைப்பு மையம் ஒன்று நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

தொழில்துறை மூலமாக தொடர்ந்து முதலீட்டாளர்களை தொடர்பு கொண்டு பேசியதன் மூலமாக சமீபத்தில் தமிழகத்தில் முதலீடு செய்ய பல திட்டங்கள் ஈர்க்கப்பட்டுள்ளன.

அதன்படி, ரூ.2,500 கோடி முதலீட்டில் மோட்டார் வாகன உற்பத்தி திட்டம்; ரூ.4 ஆயிரத்து 500 கோடி முதலீட்டில் டயர் உற்பத்தி ஆலை; ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் கண்ணாடி மற்றும் கண்ணாடி இழை உற்பத்தி; ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உட்பட இரண்டு சக்கர வாகன உற்பத்தி ஆலைகள்; ரூ.28 ஆயிரத்து 800 கோடி முதலீட்டில் பெட்ரோலியம் சுத்திகரிப்புத் திட்டங்கள்; ரூ.500 கோடி முதலீட்டில் டயர் வேதிப் பொருட்கள் உற்பத்தி திட்டம்; ரூ.1,800 கோடி முதலீட்டில் நான்கு மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டங்கள்; ரூ.350 கோடி முதலீட்டில் ஜவுளி திட்டம்; ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் இதர பிற திட்டங்கள் என இந்தத் திட்டங்களின் மூலமாக ரூ.45 ஆயிரம் கோடி முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது.

விடா முயற்சியின் ஓர் அம்சமாக 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23 மற்றும் 24-ந் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் அடங்கிய ஒரு வழிகாட்டுதல் குழு மற்றும் தலைமைச் செயலாளர் தலைமையின் கீழ் ஒரு ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.

உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு ஒரு சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா மற்றும் சில நாடுகளை பங்குதாரர் நாடுகளாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வல்லம் வடகால் தொழில் பூங்காவில் ஒரு வானூர்திப் பூங்கா அமையவுள்ளது. இது ஐந்தாண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்ப்பதோடு, சுமார் 35 ஆயிரம் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும்.

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சிப்காட் நடப்பாண்டில் 404 ஏக்கர் நிலத்தை, 133 தொழில் அலகுகளுக்கு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் ரூ.1,785 கோடி முதலீடு செய்யப்பட்டு 27 ஆயிரத்து 805 நபர்கள் வேலை வாய்ப்பு பெற உள்ளனர்.

தொழில் வளர்ச்சியில் இந்தியாவில் 3-வது இடத்தில் தமிழகம் தொடர்ந்து நீடிக்கிறது. எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி குறையாது. ஏனென்றால், இங்கு தொழில் தொடங்குவதற்கான உகந்த சூழ்நிலை, தொழில் கொள்கை, மனிதவள ஆற்றல், திறமையான தொழிலாளிகள், மிகச் சிறந்த பொறியாளர்கள் என எத்தனையோ சாதகமான அம்சங்கள் உள்ளன.

உலக முதலீட்டாளர் மாநாட்டுக்குப் பிறகு யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரிய தொழில் வளர்ச்சியை தமிழகம் பெறும்.

இவ்வாறு அவர் பதிலளித்துப் பேசினார்.

பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை கண்காணிப்பு அமைப்பு மென்பொருள் நடைமுறைப்படுத்தப்படும்.

சர்க்கரைத் துறை, தமிழ்நாடு சர்க்கரைக் கழகம், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த சர்க்கரை வளாகம் அமைக்கப்படும்.

கள்ளக்குறிச்சி 1 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்புத் திசு வளர்ப்பு ஆய்வகம் அமைக்கப்படும்.

இவ்வாறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். 

Next Story