மாநில செய்திகள்

110-விதி அறிவிப்புகளை ஆதரித்தோ, எதிர்த்தோ பேசலாமா? சபாநாயகருடன், துரைமுருகன் வாக்குவாதம் + "||" + With Speaker, Duraimurugan argued

110-விதி அறிவிப்புகளை ஆதரித்தோ, எதிர்த்தோ பேசலாமா? சபாநாயகருடன், துரைமுருகன் வாக்குவாதம்

110-விதி அறிவிப்புகளை ஆதரித்தோ, எதிர்த்தோ பேசலாமா?
சபாநாயகருடன், துரைமுருகன் வாக்குவாதம்
110-விதியின் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகளை ஆதரித்தோ? எதிர்த்தோ பேசலாமா? என்பது குறித்து சபாநாயகருடன், துரைமுருகன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
சென்னை, 

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-விதியின் கீழ் குறுவை தொகுப்பு திட்டம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். இதைத்தொடர்ந்து முதல்- அமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து அமைச்சர்கள் பேச தொடங்கினர். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், அமைச்சர்களின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

துரைமுருகன்:-110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் வெளியிடும் அறிவிப்புகளை ஆதரித்தோ, எதிர்த்தோ, பேசக் கூடாது. எந்த விதியின் அடிப்படையில் அமைச்சர்கள் பேசுகிறார்கள்.

சபாநாயகர் தனபால்:-சட்டசபை விதிகளை தான் நான் கடைப்பிடிக்கிறேன். முதல்- அமைச்சரின் அறிவிப்புக்கு அமைச்சர்கள் நன்றி தான் தெரிவிக்கிறார்கள்.

துரைமுருகன்:-அறிவிப்புகளை நான் எதிர்த்து பேசினால் சரியாக இருக்குமா?.

அனுமதிக்க முடியாது

சபாநாயகர் தனபால்:- 110-விதியின் கீழ் அறிவிக்கப்படும் அறிவிப்புகளை ஆதரித்தோ, எதிர்த்தோ பேசக் கூடாது என்பது தான் விதி. நன்றி சொல்லக்கூடாது என்று சொல்லவில்லை. அமைச்சர்கள் நன்றி தான் சொல்லுகிறார்கள். 1977-ல் இருந்து நானும் இந்த அவையில் உறுப்பினராக தான் இருக்கிறேன். எனக்கு அவை விதிகள் தெரியும்.

(அப்போது துரைமுருகன் ஆவேசமாக பேசினார்.)

சபாநாயகர் தனபால்:-நீங்கள் நன்றி வேண்டுமானால் சொல்லுங்கள். விவாதம் என்றால் அனுமதிக்க மாட்டேன். ஒரு நல்ல விஷயத்தை முதல்-அமைச்சர் அறிவிக்கும்போது, அதற்கு நன்றி சொல்லுவது மரபு தானே.

இதைத்தொடர்ந்து அமைச்சர் காமராஜ் பேச எழுந்தார். அவரது பேச்சுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சபாநாயகர்:-அமைச்சர்....நீங்கள் நன்றி மட்டும் சொல்லுங்கள். கடந்த காலங்களில் இதுபோன்று 110-விதியின் கீழ் பலரும் பேசியிருக்கிறார்கள்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

வெளிநடப்பு

இதைத்தொடர்ந்து எதிர்க் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, “ 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முடியாது என்று முதல்-அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். இதை கண்டிக்கும் வகையில் தி.மு.க. வெளிநடப்பு செய்கிறது”என்றார்.

இதேபோல் கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்), முகமது அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) ஆகியோரும் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர்.