மாநில செய்திகள்

நெசவாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல் + "||" + DA hike for weavers Minister OS Manian informed

நெசவாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்

நெசவாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும்
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்
நெசவாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
சென்னை, 

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற கைத்தறி மற்றும் துணிநூல், கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர் எழிலரசன் (காஞ்சீபுரம் தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

உறுப்பினர் எழிலரசன்:- விவசாயிகள் வயிற்றுக்கு உணவு அளிப்பதுபோல், நெசவாளர்கள் நமக்கு உடையளித்து மானத்தை காக்கிறார்கள். ஆனால், அவர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிகள் தேக்கம் அடையும்போது, அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற நிலையை தடுக்க, ஆடைகளுக்கு இவ்வளவு சதவீதம் தள்ளுபடி என்பதை மாற்றி, இவ்வளவு ரூபாய் தள்ளுபடி என்ற நிலையை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்தால், ஜவுளி தேக்கமடைவதை தடுக்க முடியும்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:- மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.40 கோடி மானியம் வழங்குவதற்கான நிதியை வழங்க வேண்டும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக அந்த நிதியை வழங்கவில்லை. மத்திய ஜவுளித்துறையுடன் பேசி, இப்போது ரூ.34 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. மீதித் தொகையையும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எழிலரசன்:- நெசவாளர் களுக்கான கூலி கடந்த 2 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. அதை உடனே உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், ஜரிகை தொழிலாளர்களுக்கும் கூலி உயர்த்தப்படாமல் உள்ளது. இதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். நெசவாளர்களின் வாழ்க்கை எப்படி என்றால், பட்டுப்புடவை நெய்யும்போது, அதற்கு கஞ்சிபோட்டு ஜரிகை சேர்த்து, அதன் மதிப்பை உயர்த்துவார்கள். ஆனால், அவர்களோ கஞ்சித் தொட்டிக்கு காத்திருக்கும் நிலையில் உள்ளனர்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:- ஆண்டுக்கு ஆண்டு நெசவாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்படுகிறது. துணியின் விலையில் 50 சதவீதத்திற்கு மேல் கூலியே வந்துவிடுகிறது. கடந்த ஆண்டு அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை. இந்த ஆண்டு உயர்த்தப்பட இருக்கிறது. ஒவ்வொரு நெசவாளர்களுக்கும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை 10 சதவீத மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. பட்டு நெசவாளர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 6 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் ரூ.93 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செல்லூர் ராஜூ:- கஞ்சி தொட்டி திறக் கும் நிலை தமிழ்நாட்டில் ஏற்படாது. ஏனென்றால், அ.தி. மு.க. அரசு விலையில்லா அரிசியை வழங்கிவருகிறது. இதற்கு ஆண்டுதோறும் அரசு ரூ.6 ஆயிரம் கோடி நிதியையும் ஒதுக்குகிறது. உங்கள் (தி.மு.க.) ஆட்சியில்தான் கஞ்சித் தொட்டி திறக்கும் நிலை இருந்தது.

இவ்வாறு விவாதம் நடந்தது.