‘ஊழலை ஒழிப்பதற்காக புதிய கட்சியை தொடங்கி உள்ளேன்’ கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்து நீதிபதி சி.எஸ்.கர்ணன் பேச்சு


‘ஊழலை ஒழிப்பதற்காக புதிய கட்சியை தொடங்கி உள்ளேன்’ கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்து நீதிபதி சி.எஸ்.கர்ணன் பேச்சு
x
தினத்தந்தி 8 Jun 2018 10:30 PM GMT (Updated: 8 Jun 2018 9:36 PM GMT)

ஊழலை ஒழிப்பதற்காக புதிய கட்சியை தொடங்கி உள்ளதாக கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்து நீதிபதி சி.எஸ்.கர்ணன் கூறினார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் சி.எஸ்.கர்ணன். சக நீதிபதிகள் சிலர் மீது ஊழல் புகார் கூறியதை தொடர்ந்து கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதன்பின்பும் நீதிபதிகள் பற்றி அவதூறு கருத்துக்களை கூறி வந்ததால் சுப்ரீம் கோர்ட்டு, அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது. பணியில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

கட்சி கொடி அறிமுக விழா

இந்த நிலையில், கொல்கத்தாவில் கர்ணன் புதிய கட்சி தொடங்கினார். அவரது கட்சிக்கு ‘ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. புதிய கட்சியின் கொடி அறிமுக விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நேற்று நடந்தது.

கட்சியின் தலைவரான கர்ணன் அங்கிருந்த அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்தார். கொடியின் மேலே நீல நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும், கீழே பச்சை நிறமும் இடம் பெற்றுள்ளது.

நடுவில் ரூபாய் நோட்டை லஞ்சமாக கொடுப்பதை தடுப்பது போன்ற சின்னம் இடம் பெற்றுள்ளது. அந்த சின்னத்தின் மேலே ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி என்றும், லஞ்சத்தை வேரறுப்போம் என்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

விழாவில் பொதுச்செயலாளர் அந்தோணி லிப்ரோ, பொருளாளர் ராகுல் இஸ்லாம், ஐகோர்ட்டு வக்கீல்கள் மயிலை வீராச்சாமி, அறிவுடைநம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊழல் மலிந்து விட்டது

விழாவில் கர்ணன் பேசியதாவது:-

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும், நீதித்துறையிலும் ஊழல் மலிந்து விட்டது. ஊழலை ஒழிப்பதற்காக புதிய கட்சியை தொடங்கி உள்ளேன். இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து வந்து விட்டது. இந்தியாவை காப்பாற்றவே கட்சியை தொடங்கி உள்ளேன். எங்களது கட்சி காட்டாற்று தண்ணீர் போன்று வேகம் கொண்டது. எந்த அரசியல் கட்சி எதிர்த்து நின்றாலும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.

எங்கள் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. சாதி, மதம் பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களும் எங்கள் கட்சியில் இணைய ஆர்வமாக உள்ளனர். கட்சிக்கு தேவையான நிதியை யாரிடமும் திரட்ட மாட்டேன். நானே எனது பணத்தை செலவு செய்வேன். மற்ற கட்சிகள் எங்களுடன் கூட்டணி அமைக்க விரும்பினால் ஏற்றுக்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நியமித்தது தவறானது

இதன்பின்பு அவர் நிருபர்களிடம், ‘தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 ஆயிரம் கொடுக்க உள்ளோம். தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த போது அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறினேன். அந்த புகார் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அவரை விசாரணை ஆணையத்தின் நீதிபதியாக தமிழக அரசு நியமித்தது தவறு. இதுதொடர்பாக மத்திய சட்டத்துறை செயலாளருக்கு புகார் மனு அனுப்பி உள்ளேன்’ என்று தெரிவித்தார். 

Next Story