நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புகள்: கட்டணம் நிர்ணயம் செய்ய குழு அமைக்க ஐகோர்ட்டு உத்தரவு


நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புகள்: கட்டணம் நிர்ணயம் செய்ய குழு அமைக்க  ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Jun 2018 10:45 PM GMT (Updated: 2018-06-09T03:11:42+05:30)

மருத்துவ படிப்புக்கு நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும்? என்பதை நிர்ணயம் செய்ய குழு அமைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜவஹர்லால் சண்முகம் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் ஆண்டுக்கு கட்டணமாக ரூ.18 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை மனம்போல் வசூலிக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமோ, சிறப்பு மருத்துவம், பல் மருத்துவம் போன்றவைக்கு எவ்வளவு கல்விக்கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல, நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளுக்கும் உரிய கட்டணத்தை நிர்ணயிக்க பல்கலைக்கழக மானிய குழுவுக்கு (யு.ஜி.சி.க்கு) உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

குழு அமைக்க வேண்டும்

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் வேல்முருகன் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ படிப்புகளை நடத்தும் நிகர்நிலை பல்கலைக்கழகம் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும்? என்பதை நிர்ணயம் செய்ய ஒரு குழுவை வருகிற 30-ந்தேதிக்குள் பல்கலைக்கழக மானிய குழு அமைக்க வேண்டும். இந்த குழு அனைத்து தரப்புகளின் கருத்தை கேட்டு, 6 வாரத்துக்குள் கட்டணத்தை நிர்ணயம் செய்யவேண்டும்.

ரூ.13 லட்சம்

இந்த கட்டண நிர்ணயம் தொடர்பாக அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதுவரை தமிழகத்தில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மருத்துவ படிப்புக்கு ஆண்டு கல்வி கட்டணமாக ரூ.13 லட்சம் மட்டுமே வசூலிக்க வேண்டும்.

கட்டண நிர்ணய குழு, இந்த தொகையைவிட அதிகமாக நிர்ணயித்து இருந்தால், கூடுதல் தொகையை மாணவர்கள் செலுத்த வேண்டும். குறைவாக இருந்தால், மீதித் தொகையை மாணவர்களுக்கு, பல்கலைக்கழக நிர்வாகம் திருப்பிக்கொடுக்கவேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

Next Story