முன்பதிவு இல்லாத 16 பெட்டிகளுடன் தாம்பரம் - நெல்லை இடையே புதிய ரெயில் சேவை தொடங்கியது


முன்பதிவு இல்லாத 16 பெட்டிகளுடன் தாம்பரம் - நெல்லை இடையே புதிய ரெயில் சேவை தொடங்கியது
x
தினத்தந்தி 8 Jun 2018 11:30 PM GMT (Updated: 8 Jun 2018 9:58 PM GMT)

முன்பதிவு இல்லாத 16 பெட்டிகளுடன் தாம்பரம்-நெல்லை இடையே புதிய ரெயில் சேவை நேற்று தொடங்கியது.

சென்னை, 

சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு முன்பதிவு இல்லாத ‘அந்த்யோதயா’ எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று கடந்த 2016-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி முன்னோட்டமாக கடந்த 2017-ம் ஆண்டு புத்தாண்டு அன்று தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயிலாக ‘அந்த்யோதயா’ ரெயில் இயக்கப்பட்டது. பயணிகள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்ததால், தினசரி ரெயிலாக இயக்கப்படும் என்று தேதி குறிப்பிட்டு அறிவிப்பு வெளியானது. ஆனால் திடீரென்று அந்த அறிவிப்பு ரத்தானது.

இந்தநிலையில் தாம்பரம் ரெயில் நிலையம் ரூ.40.4 கோடி செலவில் 3-வது முனையமாக உருவாக்கப்பட்டது. இதையொட்டி தாம்பரம்- நெல்லை இடையே முன்பதிவு இல்லாத ‘அந்த்யோதயா’ எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை 8-ந்தேதி தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்தது.

அதன்படி தாம்பரம் ரெயில் முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் ‘அந்த்யோதயா’ ரெயில் சேவை தொடக்க விழா சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தின் 8-வது நடைமேடையில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன், நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார்.

அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குலசேத்திரா வரவேற்று பேசினார். சென்னை கோட்ட மேலாளர் நவீன் குலாட்டி நன்றி கூறினார்.

மத்திய இணை மந்திரிகள் ராஜென் கோஹெய்ன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து வைத்து ‘அந்த்யோதயா’ ரெயில் சேவையை தொடங்கி வைத்தனர். இதையடுத்து அந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து நெல்லையை நோக்கி புறப்பட்டு சென்றது.

ரெயில் 4.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. விழா தாமதாக தொடங்கியதாலும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் பேசியதாலும் ரெயில் தாமதமாக 5.05 மணிக்கு புறப்பட்டது.

தொடக்க விழா என்பதால் ‘அந்த்யோதயா’ ரெயில் வண்ண மலர்கள், மா இலை, பலூன்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

‘பயோ’ கழிப்பறை, எல்.இ.டி. விளக்கு, புதிய வர்ணம், சோலார் மேற்கூரை, மெத்தை இருக்கை என ரெயிலின் உள்புற பகுதி அமைந்திருக்கிறது. எனவே பயணிகள் புதுவித அனுபவத்துடன் மகிழ்ச்சியாக பயணம் மேற்கொண்டனர்.

முன்பதிவு இல்லாத 16 பெட்டிகளில் 10 பெட்டிகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மற்ற பெட்டிகளில் சில பயணிகள் மட்டும் இருந்தனர். லக்கேஜ் பெட்டி உள்பட 2 பெட்டிகள் தனியாக உள்ளன.

சென்னையில் பணி மற்றும் வியாபாரம் நிமித்தமாக தென்மாவட்ட மக்கள் தங்கி உள்ளனர். குறிப்பாக தாம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். எனவே தாம்பரம்- நெல்லை புதிய ரெயில் சேவைக்கு தென்மாவட்ட மக்கள் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சிலர் கூறும்போது, ‘தாம்பரம் ரெயில் நிலையம் 3-வது முனையமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது நெல்லைக்கு ரெயில் இயக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ரெயிலை விருத்தாசலம், அரியலூர் வழியாக இயக்கினால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

கோவில்பட்டி, சாத்தூர், வாஞ்சி மணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லாது என்ற அறிவிப்பு ஏமாற்றத்தை தருகிறது. நெல்லை, முத்துநகர் போன்ற அதிவிரைவு ரெயில்களே அந்த ரெயில் நிலையங்களில் நின்று செல்கின்றன. எனவே விரைவு ரெயிலான அந்த்யோதயாவும் அந்த ரெயில் நிலையங்களில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

‘அந்த்யோதயா’ ரெயில் பயண விவரம்

கட்டணம் எவ்வளவு?

தொடக்க விழா என்பதால் நேற்று மட்டும் ‘அந்த்யோதயா’ ரெயில் சேவையில் மாற்றம் இருந்தது. இன்று முதல் தினசரி ரெயில் சேவையாக இயக்கப்படும். பயண விவரம் வருமாறு:-

* சென்னை தாம்பரத்தில் இருந்து இரவு 12.30 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் மதியம் 3.30 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

* நெல்லையில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை தாம்பரத்தை வந்தடையும்.

* தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரெயில் திருச்சிக்கு காலை 8.15 மணிக்கும், மதுரைக்கு 10.45 மணிக்கும் வந்து சேரும்.

* நெல்லையில் இருந்து புறப்படும் ரெயில் மதுரைக்கு இரவு 8.45 மணிக்கும், திருச்சிக்கு இரவு 11.53 மணிக்கும் வந்து சேரும்.

* செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

* சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்காது.

* தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு ரூ.240-ம் (விரைவு ரெயில் ரூ.200, அதிவிரைவு ரெயில் ரூ.215) மதுரைக்கு-ரூ.200-ம்(விரைவு ரெயில் ரூ.160, அதிவிரைவு ரெயில் ரூ.175), திருச்சிக்கு ரூ.155-ம்(விரைவு ரெயில் ரூ.125, அதிவிரைவு ரெயில் ரூ.140) பயண கட்டணம் ஆகும்.

* மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து தாம்பரத்துக்கு ரூ.240-ம், மதுரைக்கு ரூ.90-ம், திருச்சிக்கு ரூ.140-ம் பயண கட்டணம் ஆகும். 

Next Story