காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களின் பட்டியல்: கர்நாடகாவுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு


காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களின் பட்டியல்: கர்நாடகாவுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 9 Jun 2018 12:11 PM IST (Updated: 9 Jun 2018 12:11 PM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களின் பட்டியலை விரைவில் சமர்பிக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. #CauveryManagementCommission

புதுடெல்லி,

காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை அமைப்பது தொடர்பான அறிவிப்பு ஒன்றை மத்திய அரசிதழில் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழகம் உட்பட 4 மாநிலங்களிலும்  உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான பெயர் பட்டியலை அனுப்பி வைக்கும்படி மத்திய அரசு கடிதம் அனுப்பியிருந்தது. இதன்படி, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர் ஒருவரும், 2 முழுநேர உறுப்பினர்களும், 6 பகுதிநேர உறுப்பினர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இதில் தலைவரையும், 2 முழுநேர உறுப்பினர்கள் மற்றும் 2 பகுதிநேர உறுப்பினர்களையும் மத்திய அரசு நியமிக்கும். மீதம் உள்ள 4 பகுதி நேர உறுப்பினர்களை தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தலா ஒருவர் வீதம் பரிந்துரைக்க வேண்டும்.

இதன்படி, தமிழகம் சார்பில்  எஸ்.கே.பிரபாகர், செந்தில்குமார் ஆகிய 2 பிரதிநிதிகரளையும் நியமிக்க தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் கர்நாடகா சார்பில் எந்த பிரதிநிதிகளும் இதுவரை நியமிக்கப்படவில்லை.  ஏற்கனவே தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் உறுப்பினர் பட்டியலை சமர்ப்பித்துள்ளன. கர்நாடகா காலம் தாழ்த்துவதால் வரும் 12-ந் தேதிக்குள் மத்திய நீர்வளத்துறையிடம் காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பிக்க மத்திய அரசு,  கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.


Next Story