320 இடத்துக்கு 8,500 பேர் போட்டி: சிவில் நீதிபதி பணிக்கு முதல் நிலை தேர்வு


320 இடத்துக்கு 8,500 பேர் போட்டி: சிவில் நீதிபதி பணிக்கு முதல் நிலை தேர்வு
x
தினத்தந்தி 9 Jun 2018 9:11 PM GMT (Updated: 9 Jun 2018 9:11 PM GMT)

சிவில் நீதிபதி பணிக்கு முதல் நிலை தேர்வு சென்னை உள்பட 9 மாவட்டங்களில் நேற்று நடந்தது.

சென்னை, 

தமிழகத்தில் மாவட்ட அளவில் காலியாக உள்ள 320 சிவில் நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி வெளியிட்டது. அறிவிப்பு வெளியாகிய தினத்தில் இருந்தே தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் 7-ந் தேதி வரை விண்ணப்பம் செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.

தேர்வுக்கு சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற 8 ஆயிரத்து 608 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 15 பேரின் விண்ணப்பங்கள் தகுதி இல்லாத காரணத்தினால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நிராகரிக்கப்பட்டது. மீதம் உள்ள 8 ஆயிரத்து 593 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

முதல் நிலை தேர்வு

இந்தநிலையில் ஏற்கனவே அறிவித்தபடி சிவில் நீதிபதி பணிக்கான முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. இதற்காக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சாவூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அனைத்து மையங்களிலும் ஒரே நேரத்தில் சிவில் நீதிபதிக்கான தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12 மணி வரை தேர்வு நடந்தது. இந்த தேர்வை சுமார் 8 ஆயிரத்து 500 பேர் எழுதினர். தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வினாக்களுக்கும் ஒரு மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பு

சிவில் நீதிபதி தேர்வில் வினாக்கள் அனைத்தும் ‘ஆப்ஜெக்டிவ்’ வடிவில் இருந்தது. தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மைய அதிகாரிகளும் தேர்வு மையங்களில் ஆய்வு நடத்தினர். 

Next Story