காவிரி ஆற்றின் குறுக்கே சாலை அமைத்து வாகனங்கள் செல்ல கட்டணம் வசூல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு


காவிரி ஆற்றின் குறுக்கே சாலை அமைத்து வாகனங்கள் செல்ல கட்டணம் வசூல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Jun 2018 9:52 PM GMT (Updated: 9 Jun 2018 9:52 PM GMT)

காவிரி ஆற்றின் குறுக்கே விதிமுறையை மீறி சாலை அமைத்து கட்டணம் வசூலித்ததை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரில் காவிரி ஆறு செல்கிறது. ஊஞ்சலூரில் இருந்து மறுகரையான நாமக்கல் மாவட்டம் கண்டிபாளையம் செல்ல பரிசல்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஆண்டுதோறும் பரிசல்துறை ஏலம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஏலம் கண்டிபாளையத்தில் நடைபெற்றது.

இந்தநிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் செல்லாததால் பரிசல்கள் இயக்கப்படவில்லை. எனவே ஊஞ்சலூருக்கும், கண்டிபாளையத்திற்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே வாகனங்கள் சென்று வரும் வகையில் தனியார் சிலர் சாலை அமைத்தனர்.

விதிமுறையை மீறி காவிரி ஆற்றின் குறுக்கே சாலை அமைப்பது பற்றிய தகவல் கிடைத்ததும், மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள். ஆனால் மீண்டும் அங்கு சாலை அமைத்து அதன் வழியாக இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு 10 ரூபாயும், 4 சக்கர வாகனங்கள் செல்ல 20 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றபோது தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாலை அடித்து செல்லப்பட்டது.

இந்தநிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் வருவது நின்றதால் ஊஞ்சலூரில் இருந்து கண்டிபாளையத்திற்கு சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது. இதுபற்றிய தகவல் ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின்பேரில் கொடுமுடி தாசில்தார் பாலசுப்பிரமணியம், துணைத்தாசில்தார் சண்முகம், வருவாய் ஆய்வாளர் ராஜீவ்காந்தி மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்போது அங்கு சிமெண்டு குழாய்களை போட்டு சாலை அமைக்கும் பணி நடந்து வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்தப்பணியை உடனடியாக தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். காவிரி ஆற்றின் குறுக்கே சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் ஊஞ்சலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story