மாநில செய்திகள்

தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களை தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு 6 பேர் படுகாயம் + "||" + Thanjavur big temple

தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களை தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு 6 பேர் படுகாயம்

தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களை தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு
6 பேர் படுகாயம்
தஞ்சை பெரிய கோவிலில் தேனீக்கள் கொட்டியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
தஞ்சாவூர்,

தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்கிறது. கடந்த 5-ந் தேதி அங்கு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் கோவிலின் முகப்பில் உள்ள கேரளாந்தகன் கோபுரத்தின் உச்சியில் உள்ள கீர்த்தி முகத்தில் இருக்கும் சிற்பம் உடைந்து சேதம் அடைந்தது.

அந்த சிற்பத்தை பழமை மாறாமல் புனரமைக்கும் பணி நேற்றுமுன்தினம் தொடங்கியது. நேற்று காலை 2-வது நாளாக சாரம் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதற்காக இரும்பு கம்பிகளை கயிறு கட்டி கோபுரத்திற்கு கொண்டு சென்றனர்.

அப்போது கோபுரத்தில் வசித்து வந்த ஏராளமான புறாக்கள் கலைந்து அங்கும், இங்குமாக பறந்தன.

தேனீக்கள் அட்டகாசம்

இதனால் அங்கு கூடு கட்டி இருந்த மலை தேனீக்களும் கலைந்து கோபுரத்தில் நின்று கொண்டிருந்த தொழிலாளர்களை கொட்டியது. அவர்கள் கோபுரத்தை விட்டு கீழே இறங்கி ஓடியபோதிலும் தேனீக்கள் அவர்களை விரட்டி சென்று கொட்டின.

மேலும், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களையும் தேனீக்கள் ஓட, ஓட விரட்டி கொட்டியதால் அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். தேனீக்களின் அட்டகாசத்தால் கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அந்தவேளையில் கோவிலை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டு பயணிகள் உள்ளிட்டவர்கள் வெளியே சாலையோரம் காத்து நின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தஞ்சை தீயணைப்பு வீரர்கள் தேனீக்கள் எங்கு கூடு கட்டியுள்ளது என்பதை கோவில் கோபுரத்தில் ஏறி பார்வையிட்டனர். தேனீக்களுக்கு பயந்து கோவிலுக்குள் நின்ற பக்தர்களையும் பாதுகாப்பாக வெளியே அனுப்பி வைத்தனர்.

6 பேர் படுகாயம்

இரவு நேரத்தில் தேனீக்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்து சென்றனர். இதற்கிடையே தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளர்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு தஞ்சை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 10-க்கும் மேற்பட்டோர் லோசன காயம் அடைந்தனர்.

இதேபோல் தேனீக்கள் கொட்டியதில் தீயணைப்பு நிலைய அதிகாரி ஒருவரும், ஒரு வீரரும் லேசான காயம் அடைந்தனர். தேனீக்களின் அட்டகாசத்தால் நேற்று காலை 10.15 மணி முதல் 11.30 மணி வரையில் 1½ மணி நேரம் கோவிலுக்குள் பக்தர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. தேனீக்கள் மீண்டும் கூட்டிற்கு சென்ற பிறகே அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.