நெய்வேலியில், ரூ.19 லட்சத்துக்காக என்.எல்.சி. அதிகாரி கடத்தி கொலை 3 பேர் கைது


நெய்வேலியில், ரூ.19 லட்சத்துக்காக என்.எல்.சி. அதிகாரி கடத்தி கொலை 3 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jun 2018 10:45 PM GMT (Updated: 9 Jun 2018 10:08 PM GMT)

நெய்வேலியில் பணத்துக்காக என்.எல்.சி. அதிகாரியை காரில் கடத்தி கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெய்வேலி, 

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் அசோக்குமார் (வயது 55). திருமணமாகாதவர். என்.எல்.சி. முதலாவது சுரங்க அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி மாயமானார்.

நீண்ட நாட்களாக வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதுபற்றி அவரது அண்ணன் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சதீஷன் கடந்த மாதம் 20-ந்தேதி நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் கொடுத்தார்.

அசோக்குமார் வங்கி கணக்கில் இருந்து ரூ.19 லட்சம் வேறு கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் சதீஷன் போலீசாரிடம் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அதிகமாக மது கொடுத்து விட்டு...

முதல்கட்ட விசாரணையில், மாயமான அன்று அசோக்குமார் நெய்வேலி பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (38), காமராஜ், வடலூரை சேர்ந்த ராஜேஷ்(37), ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுரேஷ்குமார், ராஜேஷ் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தபோது 3 பேரும் அசோக்குமாரை பணத்துக்காக கொலை செய்தது தெரியவந்தது.

மதுகுடித்து கொண்டிருந்தபோது அசோக்குமார் தன்னிடம் அளவுக்கு அதிகமாக பணம் இருக்கிறது என்று 3 பேரிடம் தெரிவித்து உள்ளார். அந்த பணத்தை அபகரிக்க திட்டம் தீட்டிய 3 பேரும் அவருக்கு அதிகமாக மது கொடுத்து விட்டு அவரது வங்கியில் இருக்கும் பணம், ஏ.டி.எம். ரகசிய எண் உள்ளிட்ட விவரங்களை வாங்கி உள்ளனர்.

கொலை செய்தனர்

பின்பு அசோக்குமாரின் கை, கால்களை ‘டேப்’ மூலம் ஒட்டி, அவரை அங்கிருந்து காரில் கடத்தி, ஆயிப்பேட்டைக்கு செல்லும் வழியில் உள்ள ராஜேஷின் வீட்டுக்கு கொண்டு வந்தனர். அங்கு அசோக்குமாரின் மூக்கு, வாய், காது ஆகிய பகுதிகளில் டேப்பால் சுற்றியதால் அவர் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தார்.

இதனை தொடர்ந்து அவரது உடலை குறிஞ்சிப்பாடி அருகே சித்தாலிக்குப்பத்தை சேர்ந்த இளங்கோ என்பவரின் நிலத்தில் புதைத்தனர். தொடர்ந்து அசோக்குமாரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.19 லட்சத்தை தங்களுடைய வங்கிக்கணக்குகளுக்கு மாற்றிக்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து போலீசார் சுரேஷ்குமார், ராஜேஷ் மற்றும் இளங்கோ ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து இளங்கோவின் நிலத்தில் புதைக்கப்பட்ட அசோக்குமாரின் உடல் குறிஞ்சிப்பாடி தாசில்தார் விஜயா முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

பிரேத பரிசோதனைக்கு பின்பு அந்த உடல் சதீசனிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய காமராஜை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story