கோவையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தகராறு: திரைப்பட இயக்குனர் அமீர் மீது போலீசார் வழக்குப்பதிவு


கோவையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தகராறு: திரைப்பட இயக்குனர் அமீர் மீது போலீசார் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 9 Jun 2018 10:24 PM GMT (Updated: 9 Jun 2018 10:24 PM GMT)

கோவையில் நடந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து திரைப்பட இயக்குனர் அமீர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை, 

கோவை எஸ்.என்.ஆர். அரங்கில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் ‘தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக் காகவா? அரசியல் காரணங்களுக்காகவா?’ என்ற தலைப்பில் வட்டமேஜை விவாத நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடந்தது.

இதில் தமிழிசை சவுந்தரராஜன் (பா.ஜனதா), செம்மலை (அ.தி.மு.க.), டி.கே.எஸ்.இளங்கோவன் (தி.மு.க.), பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்டு கம்யூ.), ஞானதேசிகன் (த.மா.கா.), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), செ.கு.தமிழரசு (இந்திய குடியரசு கட்சி), சினிமா பட இயக்குனர் அமீர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

அப்போது சினிமாப்பட இயக்குனர் அமீர் பேசுகையில், ‘கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையை தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவத்துக்கு யார் காரணம்? என்று பேசினார். இதைத் தொடர்ந்து அரங்கில் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து இருந்த பா.ஜனதா கட்சியினர் மற்றும் சார்பு அமைப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டனர்.

இதைத் தொடர்ந்து அமீருக்கு ஆதரவாக, தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவையினர் ஆதரவு தெரிவித்து கூச்சல் போட்டனர். இதனால் பா.ஜனதா- கொங்கு இளைஞர் பேரவையினருக்கு இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அதன்பேரில் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு அனைவரையும் கலைந்து போக செய்தனர். இந்த சம்பவம் கோவையில் நேற்று முன்தினம் இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக கோவை பீளமேடு போலீசார் விசாரணை நடத்தினார்கள். இயக்குனர் அமீர் தெரிவித்த கருத்து கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்ததை குறிப்பிட்டு பொறுப்பில்லாமல் தெரிந்தே அவ்வாறு பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நிகழ்ச்சி நடந்த அரங்கின் பொறுப்பாளர் சுந்தர்ராஜன் கோவை பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.

அவரது புகாரை தொடர்ந்து சினிமாப்பட இயக்குனர் அமீர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153(ஏ) (மோதலை தூண்டும் வகையில் பேசுதல்), 505 (பொது அமைதியை பாதிக்கும் வகையில் பேசுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதுபோல புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரை தொடர்ந்து புதிய தலைமுறை தொலைக் காட்சி நிர்வாகத்தின் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153(ஏ) (மோதலை தூண்டும் வகையில் பேசுதல்), 505 (பொது அமைதியை பாதிக்கும் வகையில் பேசுதல்) மற்றும் 3(1) தமிழ்நாடு பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல் பிரிவு அரங்கில் இருந்த இருக்கைகள் சேதம் அடைந்ததற்கு காரணமான அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story