மாநில செய்திகள்

காவிரி நீரை பெற நடவடிக்கை எடுங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு, துரைமுருகன் கோரிக்கை + "||" + Duraimurugan demand for the Ettapadi Palaniasamy

காவிரி நீரை பெற நடவடிக்கை எடுங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு, துரைமுருகன் கோரிக்கை

காவிரி நீரை பெற நடவடிக்கை எடுங்கள்
எடப்பாடி பழனிசாமிக்கு, துரைமுருகன் கோரிக்கை
காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் உடனடியாக காவிரி நீரை பெற முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னை, 

தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து 12-ந்தேதியன்று தண்ணீர் திறந்து விட இயலாது என்று கூறியதோடு மட்டுமல்லாமல், ஏதோ அ.தி.மு.க. ஆட்சியில் மட்டுமே ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை முதல்-அமைச்சர் பேசியிருக்கிறார்.

நீண்ட விளக்கத்தைக் கொடுத்துள்ள முதல்-அமைச்சர் அ.தி.மு.க. ஆட்சியில் இரு வருடங்கள் ஜூன் 6 மற்றும் 12-ந் தேதிகளில் மேட்டூர் அணை திறந்து விடப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். அதற்கு முன்பு இருந்த தி.மு.க. ஆட்சி காவிரி நீரை உரிய முறையில் பெற்று மேட்டூர் அணையில் தேக்கி வைத்ததால் மட்டுமே 12.6.2001 மற்றும் 6.6.2011 ஆகிய காலங்களில் குறித்த காலத்தில் அணை திறந்து விட முடிந்தது என்பதை ஏதோ முதல்-அமைச்சர் வசதியாக மறந்து விட்டார்.

மூடி மறைத்திருக்கிறார்

ஆனால் இன்றைக்கு நிலை அவ்வாறு இல்லை. 16.2.2018 அன்று காவிரியின் தமிழக உரிமையை நிலைநாட்டி உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு அளித்து விட்டது. அதன்படி காவிரி வரைவு திட்டத்தை உருவாக்காமல், காவிரி மேலாண்மை ஆணையத்தையும் அமைக்காமல் மத்திய அரசும், அ.தி.மு.க. அரசும் கைகோர்த்து 91 நாட்கள் வீண் காலதாமதத்தை உருவாக்கியதை காவிரி டெல்டா விவசாயிகளும், தமிழக மக்களும் மறக்கவில்லை. அது மட்டுமின்றி 18.5.2018 அன்று காவிரி வரைவுத் திட்டத்தையும் இறுதி செய்து ஜூன் 1-ந்தேதிக்குள் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், 22 நாட்கள் கடந்த பிறகும் இன்று வரை காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்படவில்லை.

இந்த தாமதத்திற்கு மத்திய அரசு நேரடிக் காரணம் என்றால், தஞ்சை விவசாயிகளின் நிலை குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படாமல் உறங்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசும் முக்கிய காரணம் என்பதை முதல்-அமைச்சர் முழுமையாக மூடி மறைக்க முயற்சித்துள்ளார். அது தமிழக விவசாயிகள் மத்தியில் எடுபடாது. காவிரி ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று வாதிட்டுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வெளிவந்ததிலிருந்து கடந்த 113 நாட்களில் ஆக்கப்பூர்வமான, அழுத்தம் தரக்கூடிய செயல்களில் ஈடுபட்டிருந்தால் இந்நேரம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கும். ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறப்பதில் எந்த தடையும் இருந்திருக்காது.

நடவடிக்கை எடுங்கள்

அதை கோட்டை விட்ட முதல்-அமைச்சர் தி.மு.க.வை குறை கூறுவதில் காட்டும் அக்கறையை, மத்திய பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் கொடுப்பதிலோ, உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரை திறக்க வைப்பதிலோ எவ்வித முயற்சியும் எடுக்க இயலவில்லை. தன் தோல்வியை மறைக்க தி.மு.க. மீது குறை கூறி திசை திருப்ப முனைவது அதை விட வேதனை தருகிறது.

ஆகவே விவசாயிகளின் நலனில் அரசியல் செய்வதை நிறுத்தி விட்டு, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் உடனடியாக காவிரி நீரை பெற முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசுக்கு அதற்கு தேவையான அழுத்தத்தை கொடுக்க முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. பாலாறு பிரச்சினை குறித்து “ஆந்திர முதல்-மந்திரிக்கு எத்தனை முறை கடிதம் எழுதினீர்கள்?” எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கேள்வி
பாலாறு பிரச்சினை குறித்து ஆந்திர முதல்-மந்திரிக்கு எத்தனை முறை கடிதம் எழுதினீர்கள்? என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
2. கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர்: எடப்பாடி பழனிசாமிக்கு, சைதை துரைசாமி பாராட்டு
கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிப்பதாக சைதை துரைசாமி கூறினார்.
3. தி.மு.க.வை ஊழல் கட்சி என்பதா? எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்
தி.மு.க.வை ஊழல் கட்சி என்று பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4. நயினார்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
நயினார்பாளையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.