நெல்லை அருகே மேற்குதொடர்ச்சி மலையில் பலத்த மழை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 500 பக்தர்கள்


நெல்லை அருகே மேற்குதொடர்ச்சி மலையில் பலத்த மழை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 500 பக்தர்கள்
x
தினத்தந்தி 9 Jun 2018 11:30 PM GMT (Updated: 9 Jun 2018 10:55 PM GMT)

பலத்த மழையின் காரணமாக, கோவிலுக்கு சென்ற 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.

ஏர்வாடி,

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே திருக்குறுங்குடி நம்பி கோவில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு பூஜை நடைபெறும். இதில் நெல்லை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள். அதிலும் தமிழ் மாதத்தின் கடைசி சனிக்கிழமை பூஜை விமரிசையாக நடைபெறும்.

நேற்று வைகாசி மாதம் கடைசி சனிக்கிழமை என்பதால் நம்பி கோவிலில் நடைபெறும் பூஜையில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் வந்தனர்.

அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் நம்பியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே, நம்பி கோவிலுக்கு செல்லும் தரைமட்ட தாம்போதி பாலம் மழை வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் பக்தர்கள் நம்பி கோவில் பகுதியில் சிக்கி கொண்டனர். அவர்களால் தரைமட்ட பாலத்தை கடந்து வர முடியவில்லை.

இதுபற்றி வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி மகாலிங்க மூர்த்தி, நாங்குநேரி தாசில்தார் வர்க்கீஸ் மற்றும் அதிகாரிகள், நாங்குநேரி, வள்ளியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

வெள்ளத்தில் சிக்கி நம்பி கோவில் பகுதியில் தவித்த பக்தர்களை தீயணைப்பு படை வீரர்கள் கயிறு கட்டி ஒவ்வொருவராக மீட்டனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்களை பத்திரமாக மீட்டு மறு கரைக்கு அழைத்து வந்தனர். பக்தர்கள் சென்ற மோட்டார் சைக்கிள்கள், கார், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மறு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதற்கிடையே, நம்பி கோவிலில் வழிபாடு நடத்த சென்ற 28 பக்தர்கள் ஊர் திரும்ப மறுத்து விட்டனர். அந்த பக்தர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பக்தர்கள் கூறுகையில், “நாங்கள் நேர்த்திக்கடனாக கோவிலில் மொட்டை போட்டுள்ளோம். நாளை (அதாவது இன்று) இங்குள்ள சங்கிலி பூதத்தார் கோவிலில் கிடா வெட்டி வழிபாடு நடத்தி எங்களது வேண்டுதலை நிறைவேற்றுவோம். அதன்பிறகுதான் ஊர் திரும்புவோம்” என்றனர். இதையடுத்து அந்த பக்தர்களுக்கு பாதுகாப்புக்காக வனத்துறையினர் 5 பேர் கோவிலில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

திருக்குறுங்குடி, மாவடி, ராஜாபுதூர், மலையடிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலைகள், தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மலை அடிவாரத்தில் உள்ள தாமரை குளம் நிரம்பி மறுகால் பாய்ந்தது. அந்த தண்ணீரானது செங்குளாகுறிச்சி குளம், தோழான்குளம், புலியூர்குறிச்சி குளம், வடுகச்சிமதில் குளம், திருவரங்கநேரி குளம் ஆகிய குளங்களுக்கு சென்றது.

இதேபோன்று திருக்குறுங்குடி பெரிய குளமும் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று மாலை வரை மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. 

Next Story