சமூக வலைத்தள மோசடியில் ஏமாறாமல் இருப்பது எப்படி? பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை


சமூக வலைத்தள மோசடியில் ஏமாறாமல் இருப்பது எப்படி? பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை
x
தினத்தந்தி 9 Jun 2018 11:45 PM GMT (Updated: 9 Jun 2018 11:01 PM GMT)

சமூக வலைத்தள மோசடியில் பொதுமக்கள் ஏமாறாமல் இருப்பது எப்படி என்பது குறித்து போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.

சென்னை,

சமூக வலைத்தளங்களில் ஆசைவார்த்தைகள், கவர்ச்சி விளம்பரங்கள் மூலம் அப்பாவி மக்களிடம் இருந்து நூதன முறையில் பணத்தை அபகரிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. எனவே சமூக வலைத்தள மோசடியில் பொதுமக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் க்ரைம்’ பிரிவு மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த தகவல் பாதுகாப்பு கல்வி மற்றும் விழிப்புணர்வு இயக்கம்(ஐ.எஸ்.ஈ.ஏ.) சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ‘சமூக வலைத்தள குற்றங்களும், சவால்களும்’ என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

கருத்தரங்கை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார். சமூக வலைத்தள குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்கள் மற்றும் கையேடுகளையும் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர்கள் சாரங்கன், சேஷசாயி, ஜெய்ராம், இணை கமிஷனர் அன்பு, ‘சைபர் க்ரைம்’ உதவி கமிஷனர் கனகராஜ் உள்பட போலீஸ் அதிகாரிகளும், ஐ.எஸ்.ஈ.ஏ. மானேஜர் ஐ.எல்.நரசிம்மராவ், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் காமக்கோட்டி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில் பங்கேற்ற போலீசாருக்கு சமூக வலைத்தள மோசடிகள் குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கருத்தரங்கில் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது:-

‘ஆன்-லைன்’ வங்கியில் ஓ.டி.பி. எண்ணை கொடுத்து பணத்தை இழத்தல், ‘கிரெடிட் கார்டு’ முடங்கிவிட்டது சரிசெய்கிறோம் என்று கேட்போரிடம் கார்டு விவரங்களை கொடுத்து பணத்தை இழப்பது, கடன் தருவதாக கூறி கமிஷன் தொகை என்ற பெயரில் பணத்தை இழத்தல், வேலை வாங்கித்தருவதாக கூறுவோரிடம் ஏமாந்து பணத்தை இழத்தல், திருமண இணையதளங்களில் வசதியான மாப்பிள்ளை, விலை மதிப்புமிக்க பரிசுகளுக்காக பணத்தை இழத்தல் என சென்னை நகரை பொறுத்தவரையில் தினந்தோறும் 10 முதல் 15 புகார்கள் வருகிறது.

சமீபத்தில் கூட ஆன்-லைனில் திருமண ஆசைகாட்டி ஒருவர் ரூ.40 லட்சம் அபேஸ் செய்துவிட்டதாக ஒரு பெண் புகார் அளித்திருக்கிறார். அதேபோல ‘நைஜீரியா போன்ற நாடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ஹவாலா பணத்தை ஒரு இடத்தில் பதுக்கி வைத்திருக்கிறேன். அந்த பணத்தை உங்கள் கணக்கில் அனுப்பிவைக்கிறேன்’ என்று போலியாக மின்னஞ்சல் அனுப்பி கமிஷன் பணத்தை ஏமாற்றி வாங்குகிறார்கள். இதற்கு காரணம் ஆசை தான்.

கணினியில் தெரியாத லிங்க்களில் சென்று பாஸ்வேர்டு திருடப்படும் விஷயங்கள், அறிமுகம் இல்லாதோருக்கு தனிப்பட்ட புகைப்படங்கள் அனுப்பி மிரட்டலுக்கு உட்படுவது என விவரம் தெரிந்தவர்கள், படித்தோரும் ஏமாந்து வருகின்றனர். ஏமாந்தபிறகு குற்றவாளிகளை தேடி பிடிப்பது கடினமான விஷயமாக இருக்கும். வருமுன் காப்போம் என்பதே சிறந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

சமூக வலைத்தள மோசடியில் சிக்காமல் தப்பிப்பது எப்படி? என்பது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள கையேட்டில் கூறியிருப்பதாவது:-

தப்பிப்பது எப்படி?

* மின்னஞ்சல்(இ-மெயில்) மூலம் பெறப்படும் வேலைவாய்ப்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நேர்காணல் முடியும் முன்பு பணத்தை செலுத்தக்கூடாது. வேலைவாய்ப்பு உண்மையானதா? என்று அசல் நிறுவனத்தின் இணையதளத்தின் மூலம் சரிபார்க்க வேண்டும்.

* குலுக்கல் பரிசு சீட்டு ‘இ-மெயில்’, ‘எஸ்.எம்.எஸ்.’ வந்தால் அதனை நம்பக்கூடாது. பிளஸ் என்ற குறியீட்டுடன் ஆரம்பிக்கும் சில எண்களில் இருந்துவரும் அழைப்புகள் மூலமே அதிகளவில் மோசடிகள் நடக்கின்றன. +92, +90, +09 அல்லது +344 போன்ற தொடர்பு குறியீட்டு எண்களில் இருந்து அழைப்பு வந்தால் நிராகரிக்க வேண்டும். திரும்ப அழைக்கவும் கூடாது.

* இணையதளம் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும்போது பிற செயலிகளை உபயோகப்படுத்தக் கூடாது. பொருட்களை பெற்ற பின் பணம் செலுத்தும் முறையே இணையத்தள வழியில் பொருட்கள் வாங்குவோருக்கு சிறந்தது.

தனிப்பட்ட விவரங்கள்

* குறைந்த வட்டி விகிதத்தில் கடன் தருகிறோம் என்று அழைப்பு வந்தால் அதனை நம்பக்கூடாது.

* கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை விற்பனை கூடங்கள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்.

* பேஸ்-புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தலங்களில் சொந்த விவரங்களை பதிவு செய்யக்கூடாது. அறிமுகம் இல்லாத நபர்களை இணையத்தள நண்பர்களாக ஏற்றுக்கொள்ளக் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story