துபாயில் இருந்து வந்த விமானத்தில் இடுப்பை சுற்றி 13 கிலோ தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்த பெண்


துபாயில் இருந்து வந்த விமானத்தில் இடுப்பை சுற்றி 13 கிலோ தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்த பெண்
x
தினத்தந்தி 9 Jun 2018 11:05 PM GMT (Updated: 9 Jun 2018 11:05 PM GMT)

துபாயில் இருந்து வந்த விமானத்தில், இடுப்பை சுற்றி 13 கிலோ தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்த பெண் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

கர்நாடக மாநில பெண்

அப்போது கர்நாடக மாநிலம் சிக்கமகளூரைச் சேர்ந்த பத்மா வெங்கடராமையா (வயது 52) என்ற பெண், விமானத்தில் இருந்து இறங்கி வந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.

அந்த பெண்ணின் இடுப்பு பகுதி சற்று பெரிதாக காணப்பட்டதால் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று, பெண் சுங்க அதிகாரிகளை கொண்டு சோதனை செய்தனர். அப்போது அவர், தனது இடுப்பை சுற்றி 25 தங்க சங்கிலிகள், 4 தங்க வளையங்களை மறைத்து வைத்து, கடத்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ரூ.4 கோடி நகைகள் பறிமுதல்

அவரிடம் இருந்து ரூ.4 கோடி மதிப்புள்ள 13 கிலோ தங்க நகைகளை, விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த பெண்ணை கைது செய்தனர்.

மேலும் அவர், யாருக்காக இந்த தங்க நகைகளை துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து கைதான பத்மா வெங்கடராமையாவிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story