மாநில செய்திகள்

அரசு பன்னோக்கு உயர்சிகிச்சை மருத்துவமனையில்முழுஉடல் பரிசோதனை செய்துகொள்வது எப்படி? + "||" + How to get a full body check up?

அரசு பன்னோக்கு உயர்சிகிச்சை மருத்துவமனையில்முழுஉடல் பரிசோதனை செய்துகொள்வது எப்படி?

அரசு பன்னோக்கு உயர்சிகிச்சை மருத்துவமனையில்முழுஉடல் பரிசோதனை செய்துகொள்வது எப்படி?
சென்னை அரசு பன்னோக்கு உயர்சிகிச்சை மருத்துவமனையில் முழுஉடல் பரிசோதனை செய்துகொள்வது குறித்து அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,

ஏழை எளிய மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்புகளை வலுப்படுத்தி நவீன மருத்துவ கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏழை எளியோர் குறைந்த கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வசதியாக சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர்சிகிச்சை மருத்துவமனையில் கடந்த 8-ந்தேதி அம்மா முழு உடல் பரிசோதனை மையம் தொடங்கப்பட்டு உள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் முழுஉடல் பரிசோதனைக்கு பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் குறைந்த கட்டணம் வசூலிப்பதால் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

3 விதமான பரிசோதனை முறைகள்

இந்த முழு உடல் பரிசோதனை மையத்தில் அம்மா ‘கோல்டு’, அம்மா ‘டைமன்ட்’, அம்மா ‘பிளாட்டினம்’ என 3 விதமான பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

இதில் ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் அளிக்கப்படும் அம்மா ‘கோல்டு’ பரிசோதனையில் முழு ரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, ரத்த சர்க்கரை பரிசோதனை (உணவுக்கு முன், உணவுக்கு பின்), சிறுநீரக ரத்த பரிசோதனை, ரத்த கொழுப்பு பரிசோதனை, கல்லீரல் ரத்த பரிசோதனை, ஹெப்படைடிஸ்-பி ரத்த பரிசோதனை, ரத்த வகை மற்றும் ஆர்.எச். பரிசோதனை, இருதய சுருள் படம், எண்ணியல் நெஞ்சு ஊடுகதிர் படம், அல்ட்ரா சவுண்ட் கருவி மூலம் அடிவயிறு பரிசோதனை, கர்ப்பப்பை வாய் பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

இதேபோல் ரூ.2 ஆயிரத்துக்கு அளிக்கப்படும் அம்மா ‘டைமன்ட்’ பரிசோதனையில் அம்மா ‘கோல்டு’ பரிசோதனைகளுடன், கூடுதலாக எதிரொலி இதய துடிப்பு, அளவீடு, புற்றுநோய், தைராய்டு ஆகிய பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.

ரூ.3 ஆயிரத்துக்கு அளிக்கப்படும் அம்மா ‘பிளாட்டினம்’ சிறப்பு பரிசோதனையில் அம்மா ‘டைமன்ட்’ பரிசோதனைகளுடன் கூடுதலாக மார்பக சிறப்பு பரிசோதனை, எலும்பு உறுதித்தன்மை ஆகிய பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.

முன்பதிவு செய்யும் வசதி

பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் டாக்டர் பரிந்துரையின்பேரில் தான் வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இங்குள்ள டாக்டர்களிடம் நோயின் தன்மையை கூறி பரிசோதனை செய்து கொள்ளலாம். நோயாளிகள் பரிசோதனை செய்து கொள்ள நேரடியாக வரலாம்.

முன்பதிவு செய்துவிட்டு வந்தால் குறிப்பிட்ட நேரத்தில் பரிசோதனையை முடித்துவிட்டு வீடு திரும்பலாம். ஆன்-லைனில் முன்பதிவு செய்ய www.tng-mssh.mhc.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

அத்துடன் 044- 25 666 111 என்ற தொலைபேசி எண்ணில் விவரங்களை கேட்டு தெரிந்து கொள்வதுடன், 73388- 35555 என்ற செல்போன் எண்ணில் நோயாளிகள் தங்களை பற்றிய தகவல்களை குறுஞ்செய்தியாக அனுப்பி பரிசோதனைக்கான நேரத்தை தெரிந்து கொள்ளலாம்.

தினமும் 50 பேருக்கு பரிசோதனை

வாரத்தில் ஞாயிற்றுக் கிழமை தவிர மீதம் உள்ள அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பரிசோதனை நடக்கிறது. தினமும் 50 பேருக்கு பரிசோதனை செய்ய திட்டமிட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த திட்டத்தின்கீழ் ஒரு நோய்க்கு மட்டும் பரிசோதனை செய்து கொள்ள இயலாது. 3 சிகிச்சை திட்டங்களில் இருப்பது போன்று தான் பரிசோதித்து கொள்ள முடியும். இந்த திட்டத்தை மாநிலம் மட்டும் அல்லாது நாடு முழுவதும் இருந்தும், ஏன் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

எவ்வளவு நேரம் ஆகும்?

அம்மா ‘கோல்டு’ பரிசோதனை செய்து கொள்ள 1½ மணி நேரமும், அம்மா ’டைமன்ட்’ பரிசோதனைக்கு 2 மணிநேரமும், அம்மா ‘பிளாட்டினம்’ பரிசோதனைக்கு 2½ மணி நேரம் வரை ஆகலாம். நோயாளிகளின் ஒத்துழைப்பை பொறுத்து நேரம் அமையும் என்று மருத்துவர் கள் தெரிவித்து உள்ளனர்.

கட்டணத்தை தற்போது ரொக்கமாக செலுத்தும் வசதி உள்ளது. ‘பேடிஎம்’ மற்றும் ஆன்-லைனில் விரைவாக பணம் செலுத்தும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

அம்மா முழுஉடல் பரிசோதனை திட்டம் குறித்து மருத்துவமனை தொடர்பு அலுவலர் டாக்டர் ஆனந்தகுமாரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

சிறப்பு நிபுணர்கள் சிகிச்சை

கேள்வி:- பரிசோதனையில் நோய்க்கான அறிகுறி இருந்தால் இங்கேயே தங்கி சிகிச்சை பெற முடியுமா?

பதில்:- பரிசோதனையில் நோய்க்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டால் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நிபுணர்கள் மூலம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கேள்வி:- ஒரு முறை பரிசோதனை செய்தால் மீண்டும் எத்தனை நாட்களுக்கு பிறகு மீண்டும் பரிசோதனை செய்து கொள்ள முடியும்?

பதில்:- அவ்வாறு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது. ஒரு முறை பரிசோதனை செய்த பிறகு தேவைப்பட்டால் தான் மறுபரிசோதனை எடுக்க வேண்டும். அடிக்கடி பரிசோதிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தென் மாவட்டங்களில்...

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் இதேபோன்று அம்மா முழு உடல் பரிசோதனை மையம் உள்ளது. தொடர்ந்து மதுரை, கோவை மற்றும் தென்மாவட்டங்கள் உள்பட அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்த வசதியை ஏற்படுத்த அரசு தலா ரூ.10 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த வசதி விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலேயே கிடைக்கும்.