ஏழை மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்


ஏழை மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்
x
தினத்தந்தி 10 Jun 2018 8:54 PM GMT (Updated: 10 Jun 2018 8:54 PM GMT)

மக்கள் நீதி மய்யம் தத்தெடுத்த அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழை மாணவியின் கல்வி கட்டணத்தை முழுவதுமாக ஏற்பதாக அறிவித்து கமல்ஹாசன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் மார்ச் 8-ந்தேதி நடைபெற்ற மகளிர் தின மாநாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதிகத்தூர் கிராமத்தை தத்தெடுப்பதாக அறிவித்தார். அந்த கிராமத்தை மேம்படுத்தி முன்மாதிரி கிராமமாக திகழ்வதற்கான அனைத்து பணிகளையும் மக்கள் நீதி மய்யம் செய்யப்போவதாகவும் அறிவித்தார். மே மாதம் 1-ந்தேதி அதிகத்தூரில் நடந்த கிராம சபை கூட்டத்திலும் கமல்ஹாசன் பங்கேற்றார்.

இந்தநிலையில் அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்த சுனிதா என்ற மாணவி பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்று ஏழ்மை காரணமாக உயர் படிப்புக்கு செல்ல முடியாமல் தவித்தார். இந்த விவரத்தை அதிகத்தூர் ஊராட்சி முன்னாள் தலைவியும், சமூக ஆர்வலருமான சுமதி என்பவர் கமல்ஹாசனை தொடர்புகொண்டு தெரிவித்தார். இதையடுத்து மாணவி சுனிதாவை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் அலுவலகத்துக்கு கமல்ஹாசன் அழைத்தார்.

நெமிலிச்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. (வரலாறு) பட்டப்படிப்பு படிப்பதற்கான இடம் வாங்கி கொடுத்ததோடு, கல்வி கட்டணம் முழுவதையும் ஏற்பதாக அறிவித்து மாணவி சுனிதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதனால் சுனிதா மற்றும் அவருடைய தாயார் நெகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கல்லூரி படிப்பை நல்ல முறையில் அதிக தேர்ச்சியோடு முடிக்கவேண்டும் என்றும் கமல்ஹாசன் அன்பு கட்டளை பிறப்பித்தார்.

சுனிதாவின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தாயார் லட்சுமி மாதந்தோறும் கிடைக்கும் அரசு உதவித்தொகை மூலம் குடும்பம் நடத்தி வருகிறார்.

இதேபோல அதிகத்தூர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சைக்காக கடந்த மாதம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கமல்ஹாசன் வழங்கினார். அதிகத்தூர் மேம்பாட்டுக்காக என்னென்ன செய்யவேண்டும்? என்ற பரிந்துரைகள் அடங்கிய ஒரு பட்டியல் மக்கள் நீதி மய்யத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதிகத்தூரில் உள்ள 113 வீடுகளில் கழிப்பறைகள் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. பசுமையை பேணி காக்கும் வகையில் மரக்கன்றுகளும் நடப்பட உள்ளன. அதன் பின்னர் பள்ளி கட்டிடத்தை புனரமைப்பு செய்தல், குளம் தூர்வாருவதற்கான பணிகள் அரசிடம் ஒப்புதல் பெற்று செய்யப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story