தனியார்மயம் ஆக்கப்படாது: ‘வரும் காலங்களில் ரெயில் கட்டணம் உயர வாய்ப்பு இல்லை’


தனியார்மயம் ஆக்கப்படாது: ‘வரும் காலங்களில் ரெயில் கட்டணம் உயர வாய்ப்பு இல்லை’
x
தினத்தந்தி 11 Jun 2018 9:30 PM GMT (Updated: 11 Jun 2018 8:12 PM GMT)

‘ரெயில்வேத்துறையை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும், வரும் காலங்களில் ரெயில் கட்டணம் உயர வாய்ப்பு இல்லை என்றும் மத்திய மந்திரிகள் தெரிவித்தனர்.

சென்னை,

மத்திய ரெயில்வே துறை மற்றும் நிலக்கரி துறையின் கடந்த 4 ஆண்டு சாதனைகள் குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு கூட்டம் டெல்லியில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று பகல் 12 மணிக்கு நடந்தது.

மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரி துறை மந்திரி பியுஷ் கோயல் மற்றும் மத்திய ரெயில்வே இணை-மந்திரி ராஜென் கோகாய்ன், மத்திய ரெயில்வே மற்றும் தகவல் தொடர்பு இணை மந்திரி மனோஜ் சின்கா ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

இதில், 12 மாநிலங்களை சேர்ந்த நிருபர்கள் கலந்துகொண்டு கேள்விகளை கேட்டனர். சென்னையில் நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகத்தில் வீடியோ கான்பரன்சிங் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் ‘நாட்டுக்கு சேவை’ என்ற 4 ஆண்டு சாதனை மலர் வெளியிடப்பட்டது. அத்துடன் பயணிகள் புகார் அளிக்க ‘ரெயில் மேடட்’ மற்றும் ரெயில் விவரங்களை தெரிந்துகொள்ள ‘ரெயில் மெனு’ ஆகிய 2 செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மத்திய மந்திரிகள் அளித்த பதில்களும் வருமாறு.

கேள்வி:- ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பது போன்று அனைத்து நவீன வசதிகளையும் மேம்படுத்த போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளதா?

பதில்:- அனைத்து ரெயில் நிலையங்களையும் மேம்படுத்த பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு அமைக்கப்பட உள்ளது. உள்நாட்டில் தயாரிப்பு என்ற பிரதமரின் திட்டத்தின்படி வருவாய் அதிகரித்து வருகிறது.

கேள்வி:- ரெயில்வே துறை படிப்படியாக தனியார் மயமாக்கப்படும் என்று கூறப்படுகிறதே?

பதில்:- தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

கேள்வி:- ரெயில் கட்டணங்கள் அதிகரித்து உள்ளதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனரே?

பதில்:- நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பயணிகளின் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ரெயில்வே நிர்வாகத்துக்கு ஏற்படும் செலவினங்களை பயணிகள் தலையில் சுமத்த விரும்பவில்லை. பொதுமக்களின் சுமைகளை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலங்களில் கட்டணங்களும் உயர வாய்ப்பு இல்லை. மின்மயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

கேள்வி:- ரெயில் பயணங்களில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருகிறதே, அதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது?

பதில்:- நாடு முழுவதும் 6 ஆயிரம் ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதுதவிர பெண்கள் பயணம் செய்யும் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 100 சதவீதம் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து அனைத்து ரெயில் பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

கேள்வி:- சில வழித்தடங்களில் விமானத்துக்கான கட்டணம் போன்று ரெயில்வே நிர்வாகம் வசூலிக்கிறது, ஆனால் விமானம் போன்ற வசதி செய்து தரப்படவில்லையே?

பதில்:- சாதாரண பயணிகள் பயணம் செய்யும் ரெயில்களில் அதுபோன்ற அதிக கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

கேள்வி:- பணியாளர்கள் தேர்வு மற்றும் பணிகளுக்கான ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுகிறதே?

பதில்:- இந்திய ரெயில்வேயில் 13 லட்சம் பணியாளர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர். புதிய பணியாளர்கள் தேர்வு ஆன்-லைனில் நடத்தப்படுகிறது. அதேபோல் பணிகளுக்கான ஒப்பந்தங்களும் அரசு டி-போர்டல் முறையில் வெளிப்படை தன்மையாக நடப்பதால் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.

கேள்வி:- ரெயில்வேயில் புதிய திட்டங்கள் என்ன கொண்டுவரப்பட உள்ளது?

பதில்:- மும்பை- ஆமதாபாத் இடையே ஜப்பான் நாட்டு அரசின் நிதி உதவியுடன் புல்லட் ரெயில் கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலம் 8 மணிநேர பயணம் 2 மணிநேரமாக குறைக்கப்படுகிறது.

கேள்வி:- சிக்னல் பிரச்சினைகளால் பல இடங்களில் ரெயில்களில் மணிக்கணக்கில் காத்து இருக்க வேண்டியிருக்கிறதே?

பதில்:- சரக்கு போக்குவரத்துக்கு என்று பல்வேறு இடங்களில் தனி ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர இரட்டை ரெயில் பாதைகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுவதால் வரும் காலங்களில் இந்த பிரச்சினை இருக்காது. இவ்வாறு மந்திரிகள் கூறினார்கள்.

Next Story