வண்டலூர் பகுதியில் சாலை விரிவாக்கம் தாமதம் ஏன்?


வண்டலூர் பகுதியில் சாலை விரிவாக்கம் தாமதம் ஏன்?
x
தினத்தந்தி 11 Jun 2018 10:00 PM GMT (Updated: 11 Jun 2018 8:33 PM GMT)

வண்டலூர் பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்வதில் தாமதம் ஏற்படுவது ஏன்? என்பது குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

சென்னை,

நெடுஞ்சாலைகள், பொதுப்பணித்துறை, பாலங்கள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் பெரியசாமி பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு.

பெரியசாமி:-வண்டலூர்-நாசரேத்பேட்டை-மீஞ்சூர் சாலை, மத்திய கைலாஷ்-ராஜீவ்காந்தி உயர்மட்ட சாலை பணிகள் என்னவாயிற்று?.

110-விதியின் கீழ் மத்திய கைலாஷ்-சிறுசேரி வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது எந்தநிலையில் இருக்கிறது. இதுவரையில் இந்த சாலை அமைக்கப்பட்டதாக தெரியவில்லை. சிறுசேரி-மகாபலிபுரம் 6 வழிச்சாலை திட்டம் என்னவாயிற்று?. மீனம்பாக்கம்-செங்கல்பட்டு உயர்மட்ட சாலை எந்த நிலையில் இருக்கிறது. இந்த ஆட்சியில் அறிவிப்புகள் எல்லாம் சொன்ன அளவிலேயே, காகிதமாகவே இருக்கிறது. வண்டலூரில் இருந்து சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- சிறுசேரி பற்றி இங்கே சொன்னார்கள், அங்கே இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி அந்த வழியிலே நடக்க இருக்கிறது. ஆகவே, இந்த இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அந்தப் பணி துவங்குகின்ற காரணத்தினாலே தான் காலதாமதம் ஆகின்றது. இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து அந்தப் பணி துவக்கப்படும்.

வண்டலூர் பகுதியிலிருந்து சாலை விரிவாக்கம் செய்யவில்லை என்று சொல்லியிருக்கின்றார். இது மத்திய அரசிற்குட்பட்ட சாலை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் பராமரிக்கப்படுகின்ற சாலை, மாநில அரசினால் பராமரிக்கப்படுகின்ற சாலை அல்ல. நாம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றோம்.

மத்திய அரசு, இது நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதியும் தந்திருக்கிறார்கள். தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மத்தியமந்திரி நிதின்கட்கரி சென்னைக்கு வந்தபொழுது, தரமணியிலிருந்து செங்கல்பட்டு வரை உயர்மட்டச் சாலை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வைத்தோம், அதையும் நிறைவேற்றித் தருவதாக தெரிவித்திருக்கின்றார்.

சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை நிலம் எடுக்கின்ற பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்காக மத்திய அரசால் ரூபாய் 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்வதற்காக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சாலை அறிவித்தவுடனே எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது.

அதுபோலத்தான் கடந்த காலத்தில் நீங்கள் பல பாலங்களை அறிவித்தீர்கள். சென்னையில் கூட போரூர் பாலத்தை அறிவித்தீர்கள். அதற்கு அடிக்கல் நாட்டி, விழாவெல்லாம் நீங்கள் எடுத்தீர்கள். ஆனால் அதற்கு தேவையான நிலத்தை எடுக்காமல் விட்டுவிட்டீர்கள். அதற்கு தேவையான நிலம் எடுக்காத காரணத்தினால், அந்த பாலப்பணியை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியவில்லை.

ஒரு புதிய சாலை அமைக்க வேண்டுமென்று சொன்னால், முதற்கட்டப் பணி, நிலம் கையகப்படுத்தும் பணியை துவக்கி அதை முடித்த பிறகுதான், கட்டுமானப் பணியை துவக்க வேண்டும். ஆகவே, உறுப்பினர் சொல்வதை போல் ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டால் உடனே கொண்டு வர முடியாது.

விஷன்-2023-க்குள் தமிழகத்திலே பல்வேறு சாலை உட்கட்டமைப்புகளை நிறைவேற்ற வேண்டும், அப்படி நிறைவேற்றுகின்றபொழுது, இந்தியாவிலேயே தமிழகம் ஒரு சிறந்த மாநிலமாக திகழும். உட்கட்டமைப்பு சிறந்த மாநிலமாக வருகின்றபொழுது புதிய, புதிய தொழிற்சாலைகள் கிடைக்கும், அதன்மூலமாக வேலைவாய்ப்புகள் பெருகும், பொருளாதாரம் மேம்பாடு அடையும் என்ற தொலைநோக்குச் சிந்தனையோடுதான் அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

புதிய பாலத்தைப் பற்றிக் கேட்டார்கள். வேளச்சேரி சந்திப்பில் ரூபாய் 108 கோடியில் பாலம் கட்டும் பணி நடைபெற்றிருக்கிறது. பல்லாவரம் பாலம் ரூபாய் 85 கோடியில் நடைபெற்றிருக்கிறது. காளியம்மன்கோயில் சந்திப்பில், கோயம்பேடு பகுதியில் ரூபாய் 95 கோடியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேடவாக்கம் மேம்பாலம் ரூபாய் 146 கோடியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கீழ்க்கட்டளை மேம்பாலம் ரூபாய் 58 கோடியில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. திருவொற்றியூர்-பொன்னேரி-பஞ்செட்டி சாலையில் பக்கிங்காம் கால்வாய் குறுக்கே பாலம், ரூபாய் 53 கோடியில் கட்டிக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

சென்னை கிரீன்வேஸ் சாலை மற்றும் துர்காபாய் தேஷ்முக் சாலைகளை தமிழ்நாடு இசைக்கல்லூரி வழியாக இணைக்கும் வகையில் 650 மீட்டர் நீளத்திற்கு இணைப்புச் சாலை ரூ.30 கோடி மதிப்பில் அமைக்கப்படும். சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, சர்தார் பட்டேல் சாலை மற்றும் ராஜீவ்காந்தி சாலை ஆகியவற்றை இணைக்கும் மத்திய கைலாஷ் பகுதியில் சாலை மேம்பாலம் அமைத்தல், சென்னை உள்வட்டச் சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகில் நடை மேம்பாலம் அமைத்தல் மற்றும் திருப்பூர் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புஷ்பா தியேட்டர் முதல் பாண்டியன் நகர் வரை உயர்மட்ட பாலம் அமைத்தல் ஆகிய பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை ரூ.3 கோடி மதிப்பில் தயாரிக்கப்படும்.

29 மாவட்டங்களில் உள்ள 1,213 கிராமங்களில் வசிக்கும் சுமார் 60 லட்சம் மக்கள் பயனடையும் வகையில் ரூ.638.50 கோடி மதிப்பீட்டில் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 188 ஆற்றுப் பாலங்கள் நபார்டு வங்கி கடனுதவியுடன் நடப்பாண்டில் கட்டப்படும். 2 ஆயிரம் கி.மீ. நீள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்தி ரூ.800 கோடி மதிப்பில் மேம்பாடு செய்யப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Next Story