மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் பதில் உரையை புறக்கணித்து தி.மு.க. வெளிநடப்பு + "||" + Chief Minister Ignore the reply text DMK Walkout

முதல்-அமைச்சர் பதில் உரையை புறக்கணித்து தி.மு.க. வெளிநடப்பு

முதல்-அமைச்சர் பதில் உரையை புறக்கணித்து தி.மு.க. வெளிநடப்பு
பசுமை சாலை திட்டம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் கூறிய வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பதில் உரையை புறக்கணித்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று மானியக் கோரிக்கை விவாதம் முடிந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் எழுந்து பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு.

மு.க.ஸ்டாலின்:- பசுமை சாலை திட்டம் குறித்து நான் பேசியபோது குறிப்பிட்ட வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. அது அவையில் பேசக்கூடாத வார்த்தையா?. தயவுகூர்ந்து அந்த வார்த்தை அவைக்குறிப்பில் இருக்க வேண்டும். இல்லை என்றால், நாங்கள் எதிர்க்கட்சி என்ற முறையில் ஏதேனும் ஒரு நடவடிக்கைக்கு இறங்க வேண்டிய அவசியம் ஏற்படும்.


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- பசுமை சாலை திட்டம் என்பது மிகப்பெரிய திட்டம். எதிர்க்கட்சி தலைவர் கூறிய கருத்தால் பிரச்சினை எதுவும் வந்து விடக்கூடாது. எனவேதான் அந்த வார்த்தை நீக்கப்பட்டது. அதில் உள்நோக்கம் எதுவும் இல்லை.

சபாநாயகர் ப.தனபால்:- ஒரு முறைக்கு இருமுறை யோசித்துத்தான் அந்த வார்த்தையை நீக்கினேன். தமிழகத்தில் இதுபோன்ற சம்பவம் இனி நடக்கக்கூடாது.

மு.க.ஸ்டாலின்:- போராட்டம் உருவாகாமல் தடுப்பதற்கு, அங்கு இருக்கின்ற மக்களை அழைத்து கருத்து கேட்பு கூட்டத்தை நடத்துங்கள் என்று தான் நான் பதிவு செய்திருக்கிறேனே தவிர வேறெந்த நோக்கத்திலும் சொல்லவில்லை. முதல்- அமைச்சரின் பதிலுரையை நாங்கள் இருந்து கேட்க வேண்டும் என்றுதான் வந்திருக்கிறோம். ஆனால், நான் குறிப்பிட்ட வார்த்தை அவைக்குறிப்பில் இடம்பெறவில்லை என்றால், பதில் உரையை புறக்கணிக்கும் நிலை நேரிடும்.

எடப்பாடி பழனிசாமி:- மிகப்பெரிய பிரச்சினை உருவாகிக்கூடாது என்று தான் அந்த வார்த்தை நீக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் கூறிய சொல் மற்றவர்களுக்கு தூண்டுதலாக அமைந்துவிடக்கூடாது. பசுமை சாலை திட்டம் தொடர்பாக, மாவட்ட கலெக்டர் அங்குள்ள மக்களுடன் பேசி வருகிறார். பாதி பேர் அந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். சிலரை, சில அமைப்புகள் தூண்டி விடுகிறது.

ஓ.பன்னீர்செல்வம்:- நன்றாக யோசித்துத்தான் குறிப்பிட்ட அந்த வார்த்தையை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கியுள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

மு.க.ஸ்டாலின்:- நாங்கள் இவ்வளவு கேட்டும் தாங்கள் தீர்ப்பில் இருந்து எந்த மாற்றமும் வழங்கவில்லை. எனவே, நீங்கள் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பையே நீடிக்க செய்திருக்கிறீர்கள். இதனை கண்டிக்கக்கூடிய வகையில் முதல்- அமைச்சரின் பதிலுரையை தி.மு.க. உறுப்பினர்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசியதும், அவர் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், சட்டசபைக்கு வெளியே மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

பசுமை சாலை திட்டத்தை அடிப்படையாக வைத்து அந்த பகுதியிலே இருக்கக்கூடிய மக்கள் போராடுகிற சூழ்நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையிலே, இப்பொழுதுதான் தூத்துக்குடி சம்பவம் நடந்து முடிந்திருக்கிறது. தூத்துக்குடி சம்பவம் போல மக்கள் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய ஒரு அவசியம் வந்துவிடக்கூடாது, அதனால் மக்களிடத்திலே அவர்களுடைய கருத்தை கேட்டு அதனை சரிசெய்து, பின் அவர்களை சமாதானம் செய்தபிறகு இந்த திட்டத்தை கொண்டுவந்தால் நன்றாக இருக்கும் என்ற அடிப்படையிலே நான் என்னுடைய கருத்தை பதிவு செய்தேன்.

மதியம் 1.30 மணியளவிலே திடீரென்று சபாநாயகர், நான் பேசிய வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அது அவைக்குறிப்பில் இருக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால், கடைசி வரையில் எங்கள் கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனைக் கண்டித்து முதல்- அமைச்சருடைய பதில் உரையை தி.மு.க.வை சார்ந்திருக்கக்கூடிய நாங்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை