டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள பார்களை ஏன் மூடக்கூடாது? அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி


டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள பார்களை ஏன் மூடக்கூடாது? அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 11 Jun 2018 10:45 PM GMT (Updated: 11 Jun 2018 8:56 PM GMT)

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள பார்களை ஏன் மூடக்கூடாது? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை,

திருமுல்லைவாயலில் மதுபான கடைகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 25 பேரின் ஜாமீன் மனுக்களையும், மதுபான கடைகளை மூடக்கோரிய வழக்கையும் விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.கிருபாகரன், பார்த்திபன் அடங்கிய அமர்வு, மதுபான கடைகளை திறந்திருக்கும் நேரத்தை ஏன் குறைக்கக்கூடாது என கேள்வி எழுப்பி இருந்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பிற மாநிலங்களில் காலை 10 மணிக்கே மதுக் கடைகள் திறக்கப்படுவதாகவும், தமிழகத்தில் மதியம் 12 மணிக்குத்தான் திறக்கப்படுவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழகத்தில் தான் அதிக அளவில் மதுபானம் அருந்துவோர் உள்ளதாகவும், மது அருந்த எந்த கட்டுப்பாடும் இல்லை எனவும் அதிருப்தி தெரிவித்தனர்.

பின்னர், குற்ற சதி நடக்கும் இடங்களாக திகழும் டாஸ் மாக் பார்களை ஏன் மூடக்கூடாது. 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் ஆயிரம் கடைகள் மூடப்பட்டன. நடப்பு ஆண்டில் எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளன என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை ஜூலை 2-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story