மணல் அள்ளிய 48 ஆயிரம் லாரிகளை பிடித்து ரூ.120 கோடி அபராதம் வசூல்


மணல் அள்ளிய 48 ஆயிரம் லாரிகளை பிடித்து ரூ.120 கோடி அபராதம் வசூல்
x
தினத்தந்தி 11 Jun 2018 11:00 PM GMT (Updated: 11 Jun 2018 9:26 PM GMT)

ஆறுகளில் அனுமதியின்றி மணல் அள்ளிய 48 ஆயிரம் லாரிகளை பிடித்து ரூ.120 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று நடைபெற்ற நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர் துரை சந்திரசேகரன் (திருவையாறு தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு.

துரை சந்திரசேகரன்:- ஆறுகளில் மணல் அள்ளுவதில் பெரிய தவறு நடக்கிறது. கொல்லிடம் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதை அரசு தடுக்க வேண்டும். வெளிநாட்டு மணல் இறக்குமதிக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும். எம்- சேண்ட் மணல் விற்பனையையும் ஊக்குவிக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- அனுமதியின்றி மணல் அள்ளும் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சி காலத்தில், ஆறுகளில் அனுமதியின்றி மணல் அள்ளிய 18 ஆயிரம் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 6 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் 48 ஆயிரம் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ரூ.120 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. எம்.-சேண்ட் மணலை கட்டுமானத்திற்கு பயன்படுத்த மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வெளிநாட்டு மணல் இறக்குமதிக்கு டெண்டர் விடப்பட்டு, இறுதிக்கட்டத்தை பணிகள் எட்டியுள்ளது. ஓரிரு மாதங்களில் வெளிநாட்டு மணல் இறக்குமதி செய்யப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படும்.

துரை சந்திரசேகரன்:- மணல் அள்ளும் லாரிகள் ஒரு ரசீதை வைத்துக்கொண்டு மீண்டும் மணல் அள்ள வருகின்றன.

எடப்பாடி பழனிசாமி:- மணல் விற்பனையில் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகத் தான், ரொக்கப் பணம் வாங்குவது கிடையாது. ‘சுவைப்’ மெஷின், ஆன்லைன் மூலமே பணம் கட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மணல் அள்ளும் இடங்களில் கேமராவும், லாரிகளில் ஜி.பி.எஸ். கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. யாரும் தனியாக மணல் அள்ள முடியாது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story