அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம்


அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2018 10:45 PM GMT (Updated: 11 Jun 2018 9:48 PM GMT)

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழக மக்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்காக ஜெயலலிதா நடத்திய சட்ட போராட்டங்களும், தர்மயுத்தங்களும் தமிழக மக்களை அரணாக காத்து நிற்கின்றன. ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பிலும், தமிழக முதல்-அமைச்சர் பதவியிலும் இருந்து நடத்திய சட்ட போராட்டங்களின் வழியில், அ.தி.மு.க. அரசும் தொடர்ந்து சட்ட போராட்டங்களை நடத்தியும், மத்திய அரசிடம் வலியுறுத்தி பேசியும், உச்சநீதிமன்றம் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பை பெற்றுள்ளது.

இது அ.தி.மு.க. அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். உடனடியாக காவிரி நீர் பங்கீட்டை தீர்ப்பின்படி முறையாக பருவந்தோறும் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பங்கிட்டு அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, அதனை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனை ஜெயலலிதாவின் நிர்வாக திறமைக்கு பெருமை சேர்க்கும் சரித்திர நிகழ்வாகும். தமிழக அரசு, காவிரி தீர்ப்பின் மூலம் கிடைத்திருக்கும் வெற்றியை ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் வைத்து போற்றி மகிழ்கிறது.

காவிரி நீரை தமிழகத்துக்கு பெற்று தருவதில் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோரது வழிகாட்டுதலின்பேரில் காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி உச்சநீதிமன்றம் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பை பெற்று தந்த அ.தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வருகின்ற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மற்றும் ஜூலை 11-ந்தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலம் மற்றும் காரைக்காலிலும் ‘காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி’ விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

திருவாரூரில் 17-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும், மயிலாடுதுறையில் 18-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்று உரையாற்றுகின்றனர். பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவார்கள். மாவட்ட செயலாளர்கள் அனைத்து அணியினருடனும் இணைந்து பொதுக்கூட்டங்களை சிறப்பாக ஏற்பாடு செய்து அதன் விவரங்களை தலைமை கழகத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story