சென்னை - சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பது உறுதி


சென்னை - சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பது உறுதி
x
தினத்தந்தி 12 Jun 2018 12:00 AM GMT (Updated: 11 Jun 2018 10:22 PM GMT)

சென்னை சேலம் பசுமை வழிச்சாலை அமைக்கப்பட்டே தீரும் என்றும், விவசாய நிலங்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை,

சட்டசபையில் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, பாலங்கள் துறை மீதான மானியக்கோரிக்கையில் தி.மு.க. உறுப்பினர் பெரியசாமி பேசினார். அவரது பேச்சின் இடையே எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை-சேலம் இடையே பசுமைவழி விரைவு சாலை தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘சென்னை-சேலம் இடையே பசுமைவழி விரைவு சாலை அமைக்கப்படுவதால் 8 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் அழிக்கப்படும். இது மலைப்பகுதிகளை பாதிக்கும். எனவே சம்பந்தப்பட்ட 5 மாவட்ட மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து முடிவு எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

மேலும் போராட்டம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தெரிவித்த ஒரு கருத்து அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது.

கடந்த 25.2.2018 அன்று, மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை திட்டம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்திட்டம் 277.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பசுமை வழிச்சாலை 8 வழிச்சாலையாக, சென்னை அருகிலுள்ள தாம்பரம் முதல் சேலம் நகரம் அரியானூர் வரையில், காஞ்சீபுரத்தில் 59.1 கி.மீ., திருவண்ணாமலையில் 123.9 கி.மீ., கிருஷ்ணகிரியில் 2 கி.மீ., தர்மபுரியில் 56 கி.மீ., மற்றும் சேலத்தில் 36.3 கி.மீ., என்று இம்மாவட்டங்கள் வழியாக அமைக்கப்பட உள்ளன.

சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களுக்கு செல்வதற்கு தற்போதுள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சீபுரம், வாலாஜாபேட்டை, வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி வழியாக சுமார் 360 கிலோமீட்டர் அல்லது சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் ஆத்தூர் வழியாக சுமார் 350 கிலோமீட்டர் பயணித்து சேலம் செல்ல வேண்டும். தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணித்தால் பயண நேரம் சுமார் 5 மணி நேரமாகும்.

வருங்காலத்தில் இந்த இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளையும் அகலப்படுத்தினால், ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களும் 15 மீட்டர், அதாவது 30 மீட்டர் அகலத்திற்கு கையகப்படுத்த வேண்டும். இதற்கென மொத்தம் சுமார் 2200 ஹெக்டேர் அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு கையகப்படுத்தும் போது அந்நிலங்களில் சுமார் 40 ஆயிரம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டியிருக்கும். ஆனால், இந்த பசுமை விரைவுச்சாலை அமைக்க சுமார் 1900 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படும். பல்லாயிரக்கணக்கான ஹெக்டர் இல்லை, வெறும் 1900 ஹெக்டேர் நிலம் தான் கையகப்படுத்தப்படும்.

இதில் 400 ஹெக்டேர் நிலம் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகும். இப்புதிய சாலையினால், கிட்டதட்ட 300 ஹெக்டேர் நிலம் குறைவாக கையகப்படுத்தப்பட வேண்டும். இச்சாலையின் மொத்த நீளமான 277.30 கிலோமீட்டரில், 9.955 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை மட்டுமே, செங்கல்பட்டு, ஆரணி, போளூர், செங்கம் மற்றும் அரூர் ஆகிய வனப்பகுதியில் செல்கிறது. அதாவது, கையகப்படுத்த தேவையான 1900 ஹெக்டேரில், 49 ஹெக்டேர் வன நிலம் மட்டுமே அடங்கும். இச்சாலை அமைக்க 70 மீட்டர் அகலத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படும். இது, வனப்பகுதியில் செல்லும்போது, அதன் அகலம் 45 முதல் 50 மீட்டர் ஆக குறைக்கப்படும்.

இவ்வனப்பகுதியில் உள்ள மலைக்குள், வனத்திற்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாமல் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. மலைக்குள் சுரங்கப்பாதையாக அமைப்பது வனத்தை பாதுகாக்கும் சிறந்த முறையாக உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.

வன விலங்குகளுக்கும் எவ்வித இடையூறோ, பாதிப்போ ஏற்படாத வண்ணம் இந்த பசுமைவழி விரைவுச் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த பசுமைவழி வரைவுச் சாலை அமைப்பதினால், குறைவான மரங்களே வெட்டப்பட உள்ளன. ஏனினும், இந்த விரைவுச் சாலை இரு மருங்கிலும் சுமார் 10 மீட்டர் அகலத்திற்கு சுமார் 3 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.

புதிய நில எடுப்பு சட்டத்தின்படியும் அந்த நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இச்சட்டத்தின்படி அடிப்படை சந்தை மதிப்பில் நகர்புறங்களில் குறைந்தபட்சம் இரண்டு மடங்கும், கிராமபுறங்களில் குறைந்தபட்சம் இரண்டரை மடங்கிலிருந்து 4 மடங்கு வரை இழப்பீடாக வழங்கப்படும். கையகப்படுத்தப்படும் நிலத்திலுள்ள மரங்கள், கட்டடங்கள் மற்றும் கிணறு ஆகியவற்றிற்கும் தனியே உரிய இழப்பீடு வழங்கப்படும். மேலும், கட்டிடங்களுக்கு தேய்மான மதிப்பு ஏதும் கணக்கிடப் படாமல் தனியே இழப்பீடு வழங்கப்படும். மத்திய அரசின் தங்க நாற்கர சாலை மற்றும் வடக்கு தெற்கு சாலை திட்டத்தின்படி வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையுடன் ஒப்பிடுகையில் தற்போதுள்ள இழப்பீடு சுமார் நான்கு மடங்கு அதிகமாகும்.

தி.மு.க. மத்தியிலே ஆட்சியிலே இடம் பெற்றிருந்தது. அப்போது மத்தியமந்திரியாக டி.ஆர்.பாலு இருந்தார். அப்பொழுது கொடுக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையைவிட இப்பொழுது கூடுதலாக இழப்பீட்டுத் தொகை அந்த நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். உதாரணமாக, 2007-2008-ம் ஆண்டு சேலம் நகரத்திற்கு அருகில் உள்ள அயோதிபட்டணத்திற்கு நான்குவழி சாலை நிலம் எடுக்கும் போது, ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை அப்பொழுது 8 லட்சம் ரூபாய், ஆனால் தற்போது குறைந்தபட்சம் 20 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

அதே பகுதியில் உள்ள கான்கிரீட் தள வீடுகளுக்கு இழப்பீட்டுத்தொகை அன்று சதுரடிக்கு 100 ரூபாய் வழங்கப்பட்டது. இன்று சதுர அடிக்கு 340 ரூபாய் வழங்கப்படுகிறது. ஓட்டு வீடுகளுக்கு அன்று சதுர அடிக்கு 60 ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது, இன்றைக்கு ஓட்டு வீடுகளுக்கு சதுர அடிக்கு 200 ரூபாய் வழங்கப்படுகிறது. தென்னை மரம் ஒன்றிற்கு அன்றைக்கு வழங்கப்பட்ட தொகை 12,000 ரூபாய். இன்றைக்கு 40,000 ரூபாய் ஒரு தென்னை மரத்திற்கு வழங்கப்படுகிறது.

இவ்விரைவுச் சாலையினால் பயண நேரம் பாதியாகக் குறையும். மேலும், இந்த குறைவான பயண தூரத்தினால், டீசல் சேமிப்பு ஒரு வருடத்திற்கு சுமார் 700 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த பசுமைவழி விரைவுச் சாலையினால், தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, செங்கம், அரூர் மற்றும் பல வட்டங்களில், தொழில் வளர்ச்சி அடைய, நிறைய வாய்ப்புகள் ஏற்படும்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக சென்னை கிண்டியில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினால் அலுவலகம் அமைக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் மூலம் தேவையான நிலங்கள் அளவீடு பணிகள் செய்யப்பட்டு, கையகப்படுத்தும் பணியும், சம்மந்தப்பட்ட மற்ற துறைகளிடமிருந்து அனுமதி பெறும் பணியும் நடைபெற்று வருகிறது.

பசுமைவழி விரைவுச் சாலை திட்டத்தினால் பாதிப்புகள் மிகவும்-குறைவாகவும், பயன்கள் அதிகமாகவும் இருப்பதால், இத்திட்டத்தினை செயல்படுத்துவது அவசியமாகும்.

எனவே, பொதுமக்களும், அமைப்புகளும் உண்மை நிலையினை அறிந்து, எதிர்ப்பினை கைவிட்டு, திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த திட்டம் அமைக்கப்பட்டே தீரும்.

பல்வேறு சாலைகள் இருக்கின்ற போது, இந்த சாலை எதற்கு என்று சொன்னதாக சொன்னீர்கள். இது மத்திய அரசிடமிருந்து பெறப்படுகின்ற சாலை. கிடைக்கின்றபோதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுதான், ஒரு அரசினுடைய நிலைப்பாடு. ஆகவே, இன்றைக்கு நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். மத்தியிலே ஆளுங்கட்சியிலே இடம்பெறவில்லை.

எதிர்க்கட்சித்தலைவருக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், இதுமட்டுமல்ல இன்னும் பல்வேறு சாலைகள் அமைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கின்றோம். தேசிய நெடுஞ்சாலை மூலமாக பல்வேறு பணிகள் செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். அந்த கோரிக்கைளை எல்லாம் மத்திய அரசு ஒரளவுக்கு ஏற்றுக் கொண்டு இருக்கின்றன. தமிழகத்திற்கு சுமார் 75,000 கோடி ரூபாய் அளவிற்கு சாலை அமைப்பு பணி செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய அரசினுடைய பரிசீலினையில் இருந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Next Story