2019-ம் ஆண்டு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு


2019-ம் ஆண்டு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு
x
தினத்தந்தி 13 Jun 2018 12:15 AM GMT (Updated: 12 Jun 2018 10:39 PM GMT)

2019-ம் ஆண்டுக்கான பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய பொதுத்தேர்வு கால அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் நடைபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு அட்டவணை வெளியிடப்பட்டு வந்தது.

பொதுத்தேர்வுகள் தான் மாணவர்களுடைய எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிப்பதால் அவர்கள் எந்தவித மன அழுத்தம் இன்றி தேர்வு எழுதுவதற்கு வசதியாகவும், ஆசிரியர்கள் முன்னதாகவே மாணவர்களை தயார் செய்யும் வகையிலும் கடந்த ஆண்டு தமிழக அரசு புதிய யுக்தியை கையாண்டது.

பள்ளிகள் தொடங்கியவுடன் பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதியும், தேர்வுப்பாடங்கள் அட்டவணையும் வெளியிடப்பட்டது. அதன்படி வருகிற கல்வி ஆண்டில் நடைபெற உள்ள பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய பொதுத்தேர்வுகள் அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பழைய பாடத்திட்ட மாணவர்களுக்கும், புதிய பாடத்திட்ட மாணவர்களுக்கும் ஒரே தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கின்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதலாக நிதிகளை ஒதுக்கி வருகிறார்கள். பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் மொழி பாடங்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டு தாள்களையும் (தேர்வு) ஒரே தாளாக மாற்றி 6 பாடங்களுக்கு தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

மாணவர்களுக்கு மன அழுத்ததை குறைக்கின்ற வகையிலும், ஆசிரியர்கள், பொதுமக்கள், சிறந்த கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டறிந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக முதல்-அமைச்சர் இந்த கோப்பில் (அரசாணை) கண் இமைக்கின்ற நேரத்தில் கையெழுத்திட்டார்.

தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் அட்டவணை கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தற்போதே வெளியிடப்படுகிறது. அதன்படி பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 19-ந்தேதி தேர்வு முடிவடையும். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ந்தேதி வெளியிடப்படும்.

பிளஸ்-1 வகுப்புகளுக்கு மார்ச் 6-ந்தேதி தேர்வு தொடங்கும். மார்ச் 22-ந்தேதி தேர்வு முடியும். மே 8-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 14-ந்தேதி தொடங்கும். மார்ச் 29-ந்தேதி தேர்வு நிறைவடையும். ஏப்ரல் 29-ந்தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தமிழ், ஆங்கிலம் 4 தாள்களை (பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள்) 2 தாள்களாக மாற்றி இருப்பதால் 8 தேர்வுகள் எழுதிய மாணவர்கள் இனி 6 தேர்வுகள் எழுதினால் போதும் என்பதால், தேர்வு முடிவுகள் 10 நாட்களுக்கு முன்பாகவே வெளியிட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- இந்த தேர்வுக்கான இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதே?

பதில்:- கடந்த ஆண்டு 3 நாட்கள் இடைவெளிவிட்டு தேர்வு நடத்தப்பட்டது. இப்போது 2 நாட்கள் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண் என்று 1,200 மதிப்பெண்கள் வகுத்து இருந்தோம். ஆனால் இந்த முறை 100 மதிப்பெண் என்ற முறையில் 6 பாடங்களுக்கு 600 மதிப்பெண் என்று இருப்பதால், இந்த கால அவகாசமே மாணவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது.

கேள்வி:- புதிய பாடப்புத்தகம் கடினமாக இருப்பதாக கூறப்படுகிறதே?

பதில்:- 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கிற மாணவர்களுக்கு புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் தேர்ச்சி அடைய செய்வதற்காக அரசு பள்ளிகள் நடைபெறும் நாட்கள் 180 ஆக உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

மாணவர்கள் சிறப்பான முறையில் கற்றுக்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ‘ஸ்மார்ட் கிளாஸ்’ கொண்டு வருகிற போது, மாணவர்கள் தங்களுடைய இல்லங்களில் இருந்து பாடங்களை செல்போன் மூலம் வீட்டில் இருந்து சிறப்பான முறையில் கற்றுதர நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆண்டு 3 ஆயிரம் பள்ளிகள். வருகிற ஆண்டில் 2 ஆயிரத்து 200 பள்ளிகள் என 5 ஆயிரத்து 200 பள்ளிகளில் ஸ்மார்ட் ‘கிளாஸ்’ கொண்டு வர திட்டங்கள் இருக்கிறது. ஐ.சி.டி. என்று சொல்லப்படுகிற 9, 10, 11, 12-ம் வகுப்பில் படிக்கிற மாணவர்களை ஒருங்கிணைந்து அந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

கேள்வி:- ஆசிரியர்களுக்கு எப்போது பயிற்சி அளிக்கப்படும்?

பதில்:- அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு மட்டும் பேராசிரியர்கள் மூலம் குழுக்களை அமைத்து அடுத்த மாதம் முதல் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலம் 15 நாட்கள் ஆகும்.

கேள்வி:- ‘நீட்’ தேர்வுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றால் தான் நல்ல மதிப்பெண் பெற முடியும் என்று முதல் மதிப்பெண், 2-வது மதிப்பெண் பெற்ற மாணவிகள் தெரிவித்துள்ளனரே?

பதில்:- ‘நீட்’ தேர்வை பொறுத்தவரையில் தமிழகத்துக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை. இருந்தபோதிலும் கடந்த ஆண்டு நமக்கு கிடைத்த அவகாசம் 4 மாதங்கள் தான். இந்த ஆண்டு முழுமையாக இருக்கிற போது, 2 ஆண்டு காலம் பயிற்சிகள் தேவை இல்லை. ஓராண்டு காலத்திலேயே முழுப்பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. புதிய பாடத்திட்டத்தில் 11-ம் வகுப்பு படிக்கிற மாணவர்களுக்கு 40 சதவீதம் நீட் தேர்வுக்கான கேள்விகள் இடம் பெற்றுள்ளது. எனவே ‘நீட்’ தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் வெற்றிவாகை சூடும் நிலை தமிழகத்தில் உருவாகும்.

கேள்வி:- ‘நீட்’ தேர்வை ஆன்-லைன் மூலம் எழுதும் முடிவை தமிழக அரசு ஏற்குமா?

பதில்:- மத்திய அரசு திடீரென்று கொண்டு வருகிற திட்டங்கள், எங்களிடம் வரும்போது அதற்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

கேள்வி:- ‘வெயிட்டேஜ்’ முறையில்...

பதில்:- 2013-ம் ஆண்டு வெயிட்டேஜ். 2017-ம் ஆண்டு வெயிட்டேஜ் வேறுபாடு இருக்கிறது. அன்றைய மதிப்பெண் வேறு. இன்றைய மதிப்பெண் வேறு. ஆகவே தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

பேட்டியின்போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குனர் ரெ.இளங்கோவன், அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி இயக்குனர் க.அறிவொளி மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story