மாநில செய்திகள்

சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை + "||" + Chennai Government at Pannukku hospital 10 year old boy Heart Transplant

சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை

சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை
சென்னையில் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்திய அரசு மருத்துவமனைகளில் சிறுவனுக்கு முதன் முறையாக இந்த அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் பிரவீன் (வயது 10). சிறுவன் பிரவீன் இருமல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டான். இதையடுத்து அவனை பெற்றோர், சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர்.


அங்கு பிரவீனை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அவனுக்கு இருதயம் பலவீனமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரவீனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து மூளைச்சாவு அடைந்த 25 வயது வாலிபரிடம் இருந்து இருதயம் பெறப்பட்டு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு நடந்தது. கடந்த மாதம் 24-ந் தேதி பிரவீனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை டாக்டர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் 4 மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடித்தனர். இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதல் முறையாகும்.

தற்போது உடல்நலம் தேறி வரும் சிறுவன் பிரவீன் கூறுகையில், ‘எனக்கு 7 வயதில் மூச்சுத்திணறல் மற்றும் சளித்தொல்லை ஏற்பட்டது. சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது நலமாக இருக்கிறேன்’, என்றான்.

இந்த அறுவை சிகிச்சை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சுகாதார துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

உலக அளவில் தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் 2-ம் இடத்தில் உள்ளது. உடல் உறுப்பு தானமாக பெறப்பட்டு தேவைக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, அரசு பன்னோக்கு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் 3 தனியார் மருத்துவமனைகளுக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஸ்டான்லி மருத்துவமனையில் 23 பேர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பெரியவர்கள் 6 பேர் இருதயம் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தமிழகத்தில் 5 ஆயிரத்து 310 பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். அதில் 150 பேர் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் வெளிப்படை தன்மையுடன் செயல்படுகிறது. இதுவரை அறுவை சிகிச்சை எல்லாம் முறையாக செய்யப்பட்டுள்ளது. விதியை மீறி வெளிநாட்டுக்கு எந்த ஒரு உடல் உறுப்பும் வழங்கப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சுகாதார துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அரசு பன்னோக்கு மருத்துவ கல்லூரி ‘டீன்’ டாக்டர் நாராயணபாபு, மருத்துவமனை தொடர்பு அதிகாரி டாக்டர் ஆனந்த்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.