உடல் உறுப்பு மாற்று ஆணையம் வெளிப்படையாக செயல்படுகிறது சட்டசபையில் விஜயபாஸ்கர் தகவல்


உடல் உறுப்பு மாற்று ஆணையம் வெளிப்படையாக செயல்படுகிறது சட்டசபையில் விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 12 Jun 2018 11:32 PM GMT (Updated: 12 Jun 2018 11:32 PM GMT)

தமிழ்நாட்டில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் வெளிப்படைத் தன்மையோடு நேர்மையான முறையில் செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை,

சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர் மாசிலாமணி, காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் செயல்பாடு, உறுப்பு தானம் செய்வதில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டி, கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதற்கு பதில் அளித்து அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நேர்மையாக மிகுந்த வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல, மூன்று முறை மத்திய அரசினுடைய விருதை தொடர்ந்து பெற்றிருக்கக்கூடிய ஒரே மாநிலம் இந்தியாவிலேயே நம்முடைய தமிழ்நாடு தான்.

இந்தநிலையில் உயிர் காக்கக்கூடிய ஒரு உன்னதமான சிகிச்சையை பற்றி ஒரு தவறான செய்தி வந்தது நிச்சயமாக மனவேதனையை எங்களுக்கு அளிப்பதாக இருக்கிறது. முன்னுரிமையில் உறுப்புதானம் என்பது, யாருக்காவது உறுப்பு தேவைப்பட்டால், அவர்கள் பதிவு செய்த பின்னர் அந்த மருத்துவமனையிலே, அதாவது அரசு மருத்துவமனையிலே ஒரு மூளைச்சாவு அடைந்தால் உடனே அந்த அரசு மருத்துவமனையிலே இருக்கக்கூடிய நோயாளிக்குத்தான் முன்னுரிமை.

அதற்குப் பின்னாலே தமிழ்நாட்டில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் என்று ஒன்று இருக்கிறது. உடனடியாக அங்கேயிருந்து இந்தியருக்கு, அதாவது நம்முடைய இந்த மாநிலத்தைச் சார்ந்த அரசு மருத்துவமனையிலே அது தேவையில்லை என்று சொன்னால், நோயாளி தயாராக இல்லையென்று சொன்னால் அது தனியார் மருத்துவமனைக்குச் செல்லும். அதற்குப் பின்னாலே தனியார் மருத்துவமனைக்கும் ஒருவேளை தேவையில்லை என்று சொன்னால், எந்த மாநிலத்திலும் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குத் தேவையில்லை என்று சொன்னால் மண்டல மையத்திற்குச் செல்லும்.

தென் மாநிலத்தில் இருக்கக்கூடிய அத்தனை மாநிலங்களிலும் இருக்கக் கூடிய எல்லா மருத்துவமனைகளும், எங்களிடத்திலே இப்போது அந்த நோயாளி தயாராக இல்லையென்று சொன்னால், அதற்குப் பின்னால் தேசிய உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் என்ற அமைப்பிற்குச் செல்லும். மத்திய அரசின் அந்த அமைப்புக்கு சென்ற பிறகு, இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த மூளைச் சாவடைந்த உறுப்புகளை எடுப்பதற்குத் தயாராக இல்லை என்று மறுக்க வேண்டும். அதுவும் ஆன் லைனில் பதிவு செய்யவேண்டும்.

எங்களிடம் இந்த குறிப்பிட்ட இதயத்தை எடுப்பதற்கு, அல்லது குறிப்பிட்ட நுரையீரலை எடுப்பதற்கு அல்லது குறிப்பிட்ட உடல் உறுப்புகள் எடுப்பதற்கு நோயாளிகள் தயார் நிலையில் இல்லை, அல்லது பொருந்தவில்லை என்று இந்தியா முழுவதும் இருக்கக்கூடியவர்கள் செய்து, இதற்கு மேல் இந்த உறுப்பு வீணாகிவிடும், யாருக்கும் பயன்படாமல் போய்விடும் என்று அந்த ஒரு விளிம்பு நிலை ஏற்பட்டால் மட்டும்தான் நம்முடைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, சட்டத்திற்கு உட்பட்டு. நம்முடைய வெளிப்படையான, நேர்மையான தன்மையிலே எங்கெங்கு யாருக்கு வருகிறதோ, ஆன்லைனில் எல்லா மருத்துவர்களும் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

அதற்கு பின்னாலே தான் நம்முடைய இந்தியர்களைத் தாண்டி மற்றவர்களுக்கு பொருத்தப்படும் என்ற செய்தியை இங்கே நான் அன்போடு பதிய வைக்க விரும்புகிறேன். இது ஒன்று. இரண்டாவது, அதே ஆங்கில நாளிதழில் முன் பக்கத்தில் மிகவும் அழகாக அவர்களே சொல்லியிருக்கிறார்கள். அதாவது 60 இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. அதிலே 50 இந்தியர்களுக்கு பொருத்தப்பட்டிருக்கிறது. 10 வெளிநாட்டைச் சார்ந்தவர்களுக்கு பொருத்தப்பட்டிருக்கிறது என்கிற அந்தப் புள்ளி விவரமும் முதல் பக்கத்திலே கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிற அந்த விவரத்தையும் நான் பார்த்தேன். அதையும் நான் உங்களுடைய கவனத்திற்கு அன்போடு தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Next Story