மாநில செய்திகள்

விஜயதரணி எம்.எல்.ஏ. சட்டசபையில் இருந்து வெளியேற்றம் + "||" + Vijayatharani MLA Exit from the assembly

விஜயதரணி எம்.எல்.ஏ. சட்டசபையில் இருந்து வெளியேற்றம்

விஜயதரணி எம்.எல்.ஏ. சட்டசபையில் இருந்து வெளியேற்றம்
சட்டசபையில் சபாநாயகருடன், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஜயதரணி எம்.எல்.ஏ. வெளியேற்றப்பட்டார். பெண் அவைக்காவலர்களுடன் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது.
சென்னை,

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நிலவும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை குறித்து, கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டு வந்து பேசினர்.


இந்தநேரத்தில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதரணி தன்னுடைய தொகுதியில் மின்சாரம் தாக்கி இறந்தவர் கள் குறித்து பேச முயன்றார். ஆனால் அவருக்கு சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை.

இதைத்தொடர்ந்து விஜயதரணி தன்னை பேச அனுமதிக்க வேண்டும் என்று குரல் எழுப்பிக்கொண்டே இருந்தார். அப்போது அமைச்சர் தங்கமணியும் பதில் அளிக்க எழுந்தார். உடனே சபாநாயகர், ‘உறுப்பினர் விஜயதரணி உங்களை போல் குறிப்பிட்ட பிரச்சினை குறித்து விவாதிக்க நிறைய பேர் அறிவிப்பு கொடுத்து இருக்கிறார்கள். நான் அதை அமைச்சரின் பார்வைக்கு அனுப்பியிருக்கிறேன். பதில் வந்ததும் இந்த அவையில் அது குறித்து விவாதிக்கப்படும்’ என்றார்.

ஆனாலும் விஜயதரணி, தன்னை பேச அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டே இருந்தார். இதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர், ‘நீங்களும் அமைச்சரும் தனியாக பேசிக்கொண்டு, இங்கே உடனே விவாதிக்க சொன்னால் ஏற்க முடியாது. நீங்கள் அமைச்சரிடம் பேசியபோது, அவர் அதற்கு விளக்கம் சொல்லியிருப்பாரே? அதுவே போதும். உட்காருங்கள்’ என்றார். சபாநாயகர் தனபாலின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் தங்கமணி, ‘நான் தனியாக பேசவில்லை’ என்று தெரிவித்தார்.

இந்த நேரத்தில் விஜயதரணி பேசிக்கொண்டே இருந்தார். அவருக்கு மைக் தரப்படவில்லை. அவர் பேசியது அவைக்குறிப்பில் ஏறாது என்று சபாநாயகர் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார்.

சபாநாயகர்:-உறுப்பினர் விஜயதரணி என்னை கட்டாயப்படுத்தக்கூடாது. நான் இன்றைக்கே அந்த பிரச்சினையை எடுப்பேன் என்று உங்களுக்கு உறுதி அளிக்கவில்லை. இந்த அவைக்கு கட்டுப்படுங்கள். என்னை வற்புறுத்தக்கூடாது. நீங்கள் தொடர்ந்து இவ்வாறு நடந்து கொண்டால் நான் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.

இதைத்தொடர்ந்து, விஜயதரணி சத்தமாக சில கருத்துக்களை தெரிவித்தார். அப்போதும் அவருக்கு மைக் தரப்படவில்லை. அதனை தொடர்ந்து விஜயதரணியை அவையில் இருந்து வெளியேற்றும்படி அவை பெண் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். சபாநாயகரின் உத்தரவை தொடர்ந்து அவை பெண் காவலர்கள் விஜயதரணியை வெளியேற்ற அவரது இருக்கைக்கு வந்தனர். அப்போது விஜயதரணி, அவை பெண் காவலர்களிடம், ‘என்னை தொடாதீர்கள்’ என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தானே வருவதாக பெண் அவைக்காவலர்களிடம் விஜயதரணி தெரிவித்தார். அப்போது அவர் ஆவேசமாக சில வார்த்தைகள் பேசினார். பின்னர் விஜயதரணியை வலுக்கட்டாயமாக அவை பெண் காவலர்கள் வெளியேற்றினர்.

விஜயதரணி வெளியேற்றப்பட்ட பின்னர் சபாநாயகர் அவையில் பேசியதாவது.

காலையில் தான் முக்கிய பிரச்சினை குறித்து அவர் என்னிடம் தெரிவித்தார். துறைவாரியாக பதில் கிடைத்ததும் அதனை எடுக்கிறேன் என்று தெரிவித்தேன். ஆனால் அவர் இன்றைக்கு கடுமையாக நடந்து கொண்டார். பேரவை தலைவரையே எதிர்த்து பேசுகிறார், கடும் விமர்சனத்தை முன்வைக்கிறார்.

நான் இதுவரையில் எந்த பெண் உறுப்பினரையும் அவையில் இருந்து வெளியேற்றியது இல்லை. அவரின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. இது ஒரு முறை அல்ல, பல முறை அவையில் இவ்வாறு தான் அவர் நடந்து கொண்டிருக்கிறார். அதை அவை உறுப்பினர்கள் அனைவரும் அறிவீர்கள். எதிர்காலத்தில் இது போன்று நடந்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தபோது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவையில் அமர்ந்திருந்தார். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத்தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் அவையில் இல்லை. சிறிது நேரத்திற்கு பிறகு அவர்கள் அனைவரும் அவைக்கு திரும்பியபோது, மீண்டும் விஜயதரணி பிரச்சினை எழுந்தது.

காங்கிரஸ் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, விஜயதரணி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பேசினார். ஆனால் அவரின் பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

சபாநாயகர்:-சட்டமன்ற காங்கிரஸ் தலைவராகிய நீங்கள் என்னிடம் எத்தனை முறை அவர் குறித்து பேசி வருத்தப்பட்டு இருக்கிறீர்கள். நடவடிக்கை எடுங்கள் என்று விஜயதரணி மிரட்டுகிறார். இதற்கு பிறகும் நான் என்ன செய்வது?. இந்த இருக்கைக்கு தான் என்ன அர்த்தம். நான் இரட்டை அர்த்தத்தில் எதையும் பேசவில்லை. நான் அப்படி நடந்து கொள்பவனும் அல்ல. அவையை திசை திருப்பி விடாதீர்கள்.

இதை தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-உட்காருங்கள் என்று சபாநாயகர் கூறுகிறார். ஆனால் அவர் உட்கார மறுத்து வாக்குவாதம் செய்கிறார். எனவே இந்த பிரச்சினையை விட்டு விடுங்கள், பிரச்சினையை வேறு மாதிரி திருப்ப வேண்டாம்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- உறுப்பினர்களின் எந்த கோரிக்கையும் நாங்கள் நிராகரித்தது இல்லை. முழுமையான தகவல்களை சேகரித்து அதனை உறுப்பினர்களுக்கு தெரிவிக்கிறோம்.

துரைமுருகன் (தி.மு.க.):-உங்கள் நடவடிக்கையில் நான் குறுக்கிடவில்லை. ஆனால் நாளைக்கு (இன்று) அவர் (விஜயதரணி) அவைக்கு வரலாம் அல்லவா?.

சபாநாயகர்:-அது அவர் நடந்து கொள்வதை பொறுத்தது.

துரைமுருகன்:-அவர் நடந்து தான் வருவார். (துரைமுருகன் இவ்வாறு குறிப்பிட்டதும் அவையில் சிரிப்பலை எழுந்தது).

சபாநாயகர்:-நீங்கள் இங்கு நடந்ததை பார்க்கவில்லை.

துரைமுருகன்:-நல்ல காலம் நான் இங்கே இல்லை...

இவ்வாறு விவாதம் நடந்தது.