மாநில செய்திகள்

ரூ.6½ கோடியில் 10 மாவட்டங்களில் விதை சுத்திகரிப்பு - சேமிப்பு கிடங்கு வசதி + "||" + Rs.6 ½ crore in 10 districts Seed treatment Storage facility

ரூ.6½ கோடியில் 10 மாவட்டங்களில் விதை சுத்திகரிப்பு - சேமிப்பு கிடங்கு வசதி

ரூ.6½ கோடியில் 10 மாவட்டங்களில் விதை சுத்திகரிப்பு - சேமிப்பு கிடங்கு வசதி
ரூ.6 கோடியே 60 லட்சம் மதிப்பில், 10 மாவட்டங்களில் விதை சுத்திகரிப்பு - சேமிப்பு கிடங்கு வசதி ஏற்படுத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.
சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற வேளாண்மைத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தை தொடர்ந்து, வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக் கண்ணு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

* ‘எம்.ஜி.ஆர். 100’ நெல் ரகம் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் பிரபலப்படுத்தப்படும்.


* மண்ணின் வளத்தினை மேம்படுத்த 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்ய ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் வேளாண்மைத் துறை மூலம் தமிழ்நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, இயற்கை வேளாண் மண்டலமாக அறிவித்து, முற்றிலும் ரசாயனமற்ற இயற்கை வேளாண்மையைப் பரவலாக்க ரூ.5 கோடியே 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* தரமான விதைகளின் தேவைகளை பூர்த்திசெய்வதற்கு 10 மாவட்டங்களில் விதை சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு கிடங்கு வசதி 11 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் ஏற்படுத்த ரூ.6 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

* பாரம்பரிய நெல் ரகங்களை ஊக்குவிக்கும் பொருட்டு, பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து, சாகுபடி செய்து, மாநில அளவில் அதிக மகசூல் பெறும் முதல் 3 விவசாயிகளுக்கு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருதும், ரொக்கமும் வழங்கப்படும்.

* சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக, பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பழக்கன்றுகள் பரிசளிப்பதை ஊக்குவிக்கும் வகையில், தோட்டக்கலைத்துறையின் மூலம் தரமான பழ மரக்கன்றுகளும், இதர கன்றுகளும் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வழங்கிட ரூ.5 கோடி செலவிடப்படும்.

* விவசாயிகளுக்கு லாபம் தரும் தோட்டக்கலை பயிர்கள் ரூ.34 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீட்டில், 44,250 ஏக்கரில் பரப்பு விரிவாக்கம் செய்யப்படும்.

* தமிழ்நாட்டில் வெங்காய சாகுபடியை ஊக்குவிக்கவும், குறைந்த செலவில் வெங்காய சேமிப்பு கிடங்குகள் அமைக்கவும், ரூ.7 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்க, இளைஞர்களுக்கு, வேளாண் எந்திரங்கள், சூரிய சக்தி பம்பு செட்டுகள் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை இயக்குதல் மற்றும் பராமரிப்பு தொடர்பான தொழில்நுட்பப் பயிற்சிகள் ரூ.1 கோடியே 39 லட்சம் செலவில் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.